×

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் முறைகேடு குறித்த விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்பு..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் முறைகேடு குறித்த விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கு விசாரணை ஆணைய தலைவரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் இதனை கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் 200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரிடமும் 13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்தாகவும் துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒருநபர் விசாரணை குழுவை 11ம் தேதி அமைத்து உத்தரவிட்டது. சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கலையரசன் தலைமையிலான குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த குழுவின் பதவிக்காலம் இம்மாதமுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழக அரசுக்கு விசாரணை ஆணைய தலைவரான கலையரசன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பல்வேறு விவரங்களை சுட்டிக்காட்டி, விசாரணை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதில் பல்வேறு முரண்பாடு இருப்பது தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே சூரப்பா மீதான ஊழல் முறைகேடு குறித்த விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் இந்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது.


Tags : Anna University ,investigation ,corruption scandal ,Surappa , Anna University. Deputy Surappa, Corruption, Investigation, 3 months leave
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...