×

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அண்ணா சிலை பகுதி:சீரமைக்க போக்குவரத்து போலீசார் இல்லை

அருப்புக்கோட்டை :  அருப்புக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீமைக்க போக்குவரத்து போலீசார் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் சிவன் கோவில் சந்திப்பு, விருதுநகர் ரோடு, எம்.எஸ் கார்னர், அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

அண்ணா சிலை பகுதியில் காய்கறி, பலசரக்கு, கமிஷன் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அண்ணா சிலை பகுதி வழியாக திருச்சுழி, கமுதி, பந்தல்குடி, விளாத்திகுளம் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. இந்நிலையில், அண்ணாசிலை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதை சீரமைக்க அருப்புக்கோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து போலீஸ் பிரிவு தொடங்கப்பட்டது. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐக்கள் என 10க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களும் விஐபி வருகை, கோவில் திருவிழா என மாற்றுப்பணிக்காக சென்று விடுகின்றனர்.

இதனால், நகரில் முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்து போலீஸ் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து போலீசாரில் 4 பேர் வேறு காவல் நிலையத்திற்கு மாறுதலாக உள்ளனர்.

இதனால், அண்ணா சிலை பகுதியில் சாலையின் இருபுறமும் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டியையும் வைத்துள்ளது. பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் நடுநோட்டில் டூவீலர்களை நிறுத்துகின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. இதை சீரமைக்க போக்குவரத்து போலீசார் இல்லை. எனவே, மாவட்ட காவல்துறை நிர்வாகம், அருப்புக்கோட்டை போக்குவரத்து பிரிவில் போதிய போலீசாரை நியமித்து, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Anna ,Aruppukottai , Aruppukkottai: It is a pity that there is no traffic police to ease the traffic congestion in Aruppukkottai Annasilai area
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்