தரமற்று போடப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பால் சாலை பணி நிறுத்தம்:கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நகராட்சி சல்லிமலை பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் அடித்தள பணிகள் செய்யாமல் மணற்பரப்பின் மேல் தார்சாலை போடப்பட்டதால், அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் மொத்தம் ரூ.13 கோடி செலவில் பல இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. போடப்பட்ட அனைத்து சாலைகளும் தரமற்று உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டு வருகிறது. தரமற்று போடப்பட்டு வரும் சாலைகளை நகராட்சி அதிகாரிகள் முறையாக கண்காணித்து ஆய்வு செய்வதில்லை.

இதனால் பெயரளவிற்கு தரமற்றதாக சாலைகள் போடப்பட்டு வருவதும், முடிந்த பணிகளுக்கு தொகை வழங்குவதுமாக நகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட சல்லிமலை பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் தார்ச்சாலை அமைப்பதற்கான எவ்வித அடித்தள வேலைகளும் செய்யப்படாமல் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மணற்பாங்கான பகுதியில் சாலை அமைப்பதற்கு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யாமல் சவுடு மணற்பாங்கான பகுதியில் மணல் மேலேயே தார்கலந்த ஜல்லி கொட்டப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

மணல் பகுதியில் எவ்வித அடித்தள வேலைகளும் செய்யாமல் தார் ஜல்லி கொட்டப்பட்டு ரோலர் இயந்திரத்தினால் சாலை போடும் பணி நடப்பதால் கொந்தளித்துப்போன இப்பகுதி மக்கள் நடைபெற்று வந்த சாலைப் பணியை நேற்று தடுத்து நிறுத்தினர். மேலும், போடப்பட்ட தார்ச்சாலையின் ஓரத்தில் இப்பகுதி மக்களே மன்வெட்டியை வைத்து அள்ளியபோது மணல்மேல் பரப்பப்பட்டிருந்த தார்கலவை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.

தரமற்று சாலை அமைப்பதின் மூலம் பல லட்சம் ரூபாய் விரயம் செய்யப்படுவதாக புகார் கூறிய இப்பகுதி மக்கள், டெண்டர் எடுத்தவர்களுக்கு ஆதரவாக நகராட்சி பொறியாளர்களும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories:

More
>