பறவைகளுக்கு உணவாக சரணாலயத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்

பரமக்குடி: பரமக்குடி அருகே தேத்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், பறவைகளுக்கு உணவாக மீன் குஞ்சுகள் வனத்துறை சார்பாக விடப்பட்டது.

பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் தேத்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்கு உணவாக மீன் குஞ்சுகளை வளர்க்கும் விதமாக, நேற்று, மீன் குஞ்சுகள் விடப்பட்டன. ஒருங்கிணைந்த வன உயிரின வாழ்விட மேம்பாட்டுத் திட்ட அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட வனத் துறையால் சரணாலயங்களுக்கு வந்துள்ள பறவைகளுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வனத்துறையால் ஒவ்வொரு பறவைகள் சரணாலயங்களிலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

மேலச்செல்வனூர், கீழ்செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சரங்குளம் உள்ளிட்ட 4 பறவைகள் சரணாலயங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் செலவில், ஒவ்வொரு சரணாலயத்திற்கு 2 ஆயிரம் மீன் குஞ்சுகளும், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்திற்கு ரூ.5 ஆயிரம் செலவில், ஆயிரம் மீன் குஞ்சுகளும் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு விடப்பட்டன. இதில் வன உயிரின காப்பாளர் மாரிமுத்து அறிவுறுத்தலின் அடிப்படையில், உதவி வனப்பாதுகாப்பு காவலர் கணேசலிங்கம், ராமநாதபுரம் வனசரக அலுவலர் சதீஷ், ராஜசேகரன், வனக்காப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ஒவ்வொரு பறவைகள் சரணாலயத்தில் மீன்குஞ்சுகளை விட்டனர்.

புல் கொண்டை மற்றும் ரோகு ஆகிய இரண்டு மீன் வகைகள் மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டு ஒரே நேரத்தில் ஐந்து பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்டது. பறவைகள் சரணாலயத்தில் இருக்கக் கூடிய பறவைகளுக்கு தற்போதைய சூழலுக்கும், எதிர்காலத்தில் பயன்படும் வகையிலும், உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனத்துறையால் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: