×

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது

மேட்டுப்பாளையம் :  மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் நெல்லிமலை அடிவாரத்தில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நேற்று துவங்கியது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 9வது யானைகள் நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி நெல்லிமலை அடிவாரத்தில் பவானி ஆற்றுப்படுகையில் 5 ஏக்கர் நிலத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு யானைகள் முகாம் நேற்று துவங்கியது. மார்ச் மாதம் 23ம் தேதி வரை 48 நாட்கள் இந்த முகாம் நடக்கிறது.

முகாமில் 21 கோயில் யானைகள், திருமடங்களை சேர்ந்த 3 யானைகள், புதுவையை சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 26 யானைகள் முகாமில் பங்கேற்றுள்ளன. நேற்று மாலை முகாமில் யானைகளை பாகன்கள் குளிப்பாட்டி, அதற்கு நெற்றிப்பட்டம் கட்டி பட்டுத்துணியால் அலங்கரித்து வரிசையாக நிறுத்தி வைத்தனர்.

முகாம் துவங்குவதற்கு முன்பு பவானி ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் மாலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கியது.
யானைகளுக்கு வழங்குவதற்காக கரும்பு, அன்னாசி, ஆப்பிள் பழம், வாழைப்பழம், சத்து டானிக் ஆகியவை வாளிகளில் வைக்கப்பட்டன. முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, வரிசையில் அணி வகுத்து நின்ற யானைகளுக்கு அமைச்சர்கள் ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு, கரும்பு ஆகியவற்றை வழங்கினர். அதன்பின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமில் உள்ள உணவுக்கூடம், சமையல் கூடம், யானைகளுக்கு ஊட்டச்சத்து மருந்து, மாத்திரைகளை பார்வையிட்டனர்.

முகாமில், கலந்து கொண்ட அனைத்து யானைகளும் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டன.ஒரு சில யானைகள் நீண்ட நாட்களுக்கு பிறகு சக யானைகளை பார்த்த மகிழ்ச்சியில் தும்பிக்கையால் அவற்றை அணைத்து கொண்டன. சில யானைகள் உற்சாக மிகுதியில் மண்ணை வாரி தலையில் போட்டபடி இருந்தன. யானைகளுக்கு மருந்து, மாத்திரை வழங்க 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

3 மணி நேரமாக காத்திருந்த யானைகள்

ஆண்டுதோறும் யானைகள் முகாம் துவங்கும் போது அரை மணி நேரத்துக்கு முன்பு யானைகளை அழைத்து வந்து வரிசையில் நிறுத்துவார்கள். ஆனால், நேற்று துவங்கிய முகாமில் யானைகளையும், பாகன்களையும் 3 மணி நேரமாக காத்திருக்க வைத்தனர். 26 யானைகளையும் ஒரே இடத்தில் நிறுத்தியதால் யானைகள் நீண்டநேரம் நிற்க முடியாமல் ஒன்றோடு ஒன்று உரசியபடியே காத்திருந்தது. 7 மணிக்கு முகாம் முடிந்ததும் யானைகள் கட்டி வைக்கும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன.


Tags : welfare camp ,reservoir ,Mettupalayam , Mettupalayam: The welfare camp for temple elephants at the foothills of Nellimalai in Thekkampatti village of Mettupalayam yesterday.
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு