×

காட்டுமன்னார்கோவில் அருகே பொது இடுகாடுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிக்கும் வருவாய்த்துறை:உடல்களை அடக்கம் செய்யவிடாமல் போலீசை வைத்து மிரட்டுவதாக புகார்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட 4 சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பொது இடுகாடு அப்பகுதியில் உள்ள ஆயிதோப்பு என்ற இடத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. இதுதவிர இவர்களுக்கு வெள்ளியங்கால் ஓடை கரையிலும் அரசு நிலத்தில் ஒரு இடுகாடு பொதுவாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதே பகுதியில் வேறு இடத்தில் இடுகாடு உள்ளது.

இந்நிலையில் எள்ளேரி ஆயிதோப்பு இடுகாடுக்கு உரிமை கோரி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் பிரச்னைக்குரிய இடத்தில் கிடைத்த மண், மனித எலும்புகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டதாகவும், அதன்படி அவ்விடம் சுடுகாடு இருந்த இடம் என 1991ம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதனை எதிர்த்து சிதம்பரம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இறந்தவர்களின் உடலை அங்கு அடக்கம் செய்யக்கூடாது என வருவாய் வட்டாட்சியர், காவல்துறையினர் ஆகியோர் அப்பகுதி மக்களை எச்சரித்து வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் தெரிவித்த போது, கடந்த பல வருடங்களாக பயன்படுத்தி வந்த இடுகாடு இடம் மற்றும் அதனருகே உள்ள இடங்களின் மதிப்பு உயர்வதால் சிலர் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து விட்டனர். கடந்த சில வருடங்களாக வறட்சி நிலவியதால் உள்ளூர் மயானத்தை யாரும் பயன்படுத்தவில்லை.

இந்த வருடம் மழை வெள்ளத்தின் போது இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு வருவாய், காவல்துறையிடமிருந்து மிகப்பெரிய சவால்களை எதிர்த்து, அதன்பிறகு அடக்கம் செய்தோம். தற்போது கடந்த 2 நாட்களில் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து 2 இறப்பு நடந்துள்ளது. இவர்களின் உடலை இந்த மயானத்தில் அடக்கம் செய்யக்கூடாது என வட்டாட்சியர் ராமதாஸ் மற்றும் காட்டுமன்னாகோவில் காவல்துறையினர் தடுத்து மிரட்டுகின்றனர்.

அதிகாரிகள் சிலர், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளிட்டவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யவிடாமல் தடுப்பதும், வேறு ஏதாவது கட்டிடங்கள் கட்டிக்கொள்ளுங்கள் என மிரட்டுவதும் பொதுமக்களுக்கு மிகவும் வேதனையளிக்கிறது. எனவே நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, முறைகேடாக பட்டாவை மாற்றம் செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Revenue Department ,cemetery ,Kadumannarko , In Katumannarko: More than 300 backward and most backward classes in the next Ellery panchayat in Katumannarko
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி