×

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ஏற்றுமதி ரசாயனமின்றி உற்பத்தியாகும் கடலாடி கூரை பட்டு:அரசே நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

*கலக்கல் கார்னர்

கலசபாக்கம் : திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கடலாடியில் ரசாயனமின்றி உற்பத்தி செய்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் கூரைப்பட்டு புடவையை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் என்றாலே மணப்பெண்ணுக்கு முதலில் நகைகள், பட்டுப்புடவைகள் தான் கண் முன் வந்து செல்லும். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கடலாடியில் திருமணத்திற்கு தயாராகும் கூரை பட்டு சேலை மிகவும் பிரசித்தி பெற்றது.

இதில் பாரம்பரியத்தை மறக்காமல் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் திருமணத்திற்கு கூரை பட்டு புடவை கட்டுவது வழக்கம். கூரை பட்டு புடவை கட்டுவதன் நோக்கம் பருத்தியில் உற்பத்தியாகும் நூலைக் கொண்டு கூரை பட்டு புடவை தயாரிக்கப்படுகிறது.

கூரை பட்டு புடவைகள் திருமணத்திற்கு  மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. திருமணம் முடிந்த பிறகு பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்டு குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கு இக்கூரை பட்டு புடவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பல்வேறு இடங்களில் கூரை பட்டு புடவை உற்பத்தி செய்தாலும் கூட கலசபாக்கம் அடுத்த கடலாடி, சிங்காரவாடி ஆகிய கிராமங்களில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவைகளுக்கு தனி மவுசு உண்டு.

இப்பகுதியில் உற்பத்தியாகும் பட்டுப்புடவைகள் சென்னை, பெங்களூர், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மங்களகரமான திருமண நாளில் எந்தவிதமான ரசாயனமும் இல்லாமல், பூச்சிகளை அழிக்காமல் நூலால் உற்பத்தி செய்யப்படும் கூரை புடவை கட்டுவதின்  மூலம் 16 வகையான செல்வங்களையும் பெற முடியும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் தான் பாரம்பரியமாக கூரை பட்டு சேலையை பயன்படுத்தி வருகின்றனர்.

திருமணத்திற்காக கூரை பட்டு சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு அரசு சார்பில் எந்தவிதமான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. மேலும் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இடைத்தரகர்கள் மூலமாகதான் விற்பனை செய்ய முடிகிறது. இதனால் கூரைப்பட்டு விற்பனையில் போதிய லாபம் கிடைப்பதில்லை.

எனவே கூரை பட்டு புடவைகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கூரை பட்டு சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு நூல் மற்றும் தளவாட பொருட்களை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். கொரோனாவால் தேங்கியுள்ள சேலைகளை உடனடியாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூரை பட்டு சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

கொரோனாவால் தொழில் முடங்கியது

கடலாடி, காஞ்சி, சிங்காரவாடி ஆகிய கிராமங்களில் திருமண கூரை பட்டுப் புடவைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு அரசியல் கட்சி சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் அரசு சார்பில் எந்தவிதமான நிவாரணமும் வழங்காததால், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிக் கடன் வழங்க கோரிக்கை

கூரை பட்டு சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சொந்தமாக தொழில் செய்ய வேண்டுமெனில் குறைந்தது ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை தளவாட பொருட்கள் வாங்க பணம் தேவைப்படுகிறது. ஆனால் நெசவாளர்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கப்படவில்லை.

இதனால் திறமைகள் இருந்தும் கூட குறைந்த கூலிக்கு தனி நபர்களிடம் வேலை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ₹500 முதல் ₹5,000 வரை கூரை பட்டு சேலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ₹300 முதல் ₹400 வரை கூலி வழங்கப்படுகிறது. கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்க வேண்டுமெனவும் கூரை பட்டு நெசவாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags : Kerala ,Karnataka ,Maharashtra ,Government , Kalasapakkam: Thiruvannamalai district near Kalasapakkam, Kerala, Karnataka, Maharashtra
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள்...