கொரோனா தடுப்பு, இந்தோ பசுபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு..!!

டெல்லி: கொரோனா தடுப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி பூண்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி நேற்றிரவு தொலைபேசி மூலம் பேசினார். இதன் பின்பு வெள்ளைமாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை பராமரிக்கவும், இரு நாடுகளும் பலன் பெறும் வகையில் உலக பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும், பைடனுடன், மோடியும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாட் எனப்படும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பிற்கு பின் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, இந்த அழைப்பின் போது பைடனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும், பருவநிலை மாற்ற விவகாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தென்சீன கடல் முதல், இந்திய - சீன கடல் எல்லை வரையிலான சீனாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்திய பசுபிக் பிராந்தியத்தின் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேசியதாகவும் பிரதமர் தன் பதிவில் கூறியுள்ளார்.

மேலும், விதிகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என்று பைடனை கேட்டுக் கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் பதவியேற்றபிறகு அவருடன் பிரதமர் மோடி தற்போது தான் முதல்முறையாக உரையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஆட்சி மாறியபின்பு இருநாட்டு நல்லுறவை தொடர்வது என்ற ரீதியிலான இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories:

>