×

விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது: டெல்லி தனிப்படை போலீஸ் அதிரடி

டெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டதாக தீப் சித்துவை டெல்லி தனிப்படை போலீஸ் கைது செய்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதி குடியரசு தினவிழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், அவர்கள் மத்திய டெல்லிக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்து பேரிகார்டர்களை வைத்து தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தடுப்புகளை மீறி சென்றனர். அப்போது, போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து, பின்வாங்கிய போராட்டக்காரர்கள் செங்கோட்டை நோக்கி நகர்ந்து சென்று அங்கு வன்முறையை அரங்கேற்றினர். செங்கோட்டையில் வீசிய தேசிய கொடியினையும் அகற்றி சீக்கிய கொடியை பறக்கவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இநத வன்முறையை முன்னின்று நடத்தியவர்கள் மற்றும் வன்முறையோடு தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியை தொடங்கிய போலீசார் பஞ்சாப் நடிகர் தீப் சித்து உள்ளிட்ட சிலரது கைது செய்ய முயன்றனர்.

அவர்கள் தலைமறைவானதால் அவர்கள் பற்றிய தகவலை தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலிசார் அறிவித்தனர். இந்த வரிசையில் பரிசு அறிவித்து தேடப்பட்டு வந்த சுக்தேவ் சிங்(60) என்பவரை சண்டிகரிலிருந்து நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தீப் சித்துவை டெல்லி தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Deep Sidhu ,rally ,Delhi Police , Actor Deep Sidhu arrested in connection with violence at farmers' rally arrested by Delhi personal police
× RELATED அர்ஜெண்டினாவில்...