×

மோடியின் ஆட்சியில் பல கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிப்பு: கரூர் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு

குளித்தலை: ‘‘மோடி அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறேன் என்று எம்பி தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இன்று பல கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர்’’ என்று கரூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ பிரசார பயணத்தின்போது நேற்று மாலை கரூர் மாவட்டம் குளித்தலைக்கு வந்தார். அங்கு வேன் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் 50.000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கருணாநிதி முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று வெற்றி பெற்று தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றதற்கு அச்சாரமாக இருந்தது இப்பகுதி மக்கள்.

கருணாநிதி குளித்தலை தொகுதிக்கும், தமிழக மக்களுக்கும் செய்ததை நினைவு கூறுகிறேன். அதில், விவசாயிகளின் வறுமையை போக்க முதல்வர் பொறுப்பேற்று முதல் கையெழுத்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கொடுத்தார். குளித்தலை தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம், காவல் நிலைய கட்டிடம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, அய்யர் மலையில் ரோப்கார் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை நினைவுபடுத்தி கூறுகிறேன்.

தற்போது அதிமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்கள். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் குளித்தலையில் பஸ் நிலையம் கொண்டுவரப்படும். பாதாள சாக்கடை திட்டம் ரயில்வே மேம்பாலம், காவிரி தடுப்பணை திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்படும். பா.ஜ.க. அரசின் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறேன் என்று எம்.பி. தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இன்று பல கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். காரணம் எங்கு பார்த்தாலும் கமிஷன், கலெக்சன், கரப்ஷன்தான் மிச்சம். இவ்வாறு உதயநிதி பேசினார்.

Tags : Millions ,campaign ,Modi ,Udayanithi ,Karur , Modi regime, youth, Udayanidhi, accusation
× RELATED பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி...