×

சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் திரண்டதால் 7 மாவட்டங்களில் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் கடும் அவதி

சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு வரவேற்பு அளித்ததால் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, நேற்று சென்னை திரும்பினார். பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழியில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (பெரும்புதூர்) வழியாக சென்னை வந்தார். ஓசூரில் இருந்து கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை வாழை தோரணங்கள், கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மேலும், ஏராளமான வரவேற்பு பேனர்களும் கட்டப்பட்டிருந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால் அவ்வழியாக சென்ற பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, தமிழகம் வரும் சசிகலாவின் வாகனத்துடன், 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வரவேண்டும். அமமுக கட்சியினரின் மற்ற வாகனங்கள் பின்தொடர்ந்து வர அனுமதியில்லை. அவ்வாறு வந்தால் வழியிலேயே நிறுத்தப்படும். சசிகலா உட்பட யாரும், அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிப்பதற்கும், பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் அனுமதியில்லை. தோரணங்கள், பேனர்கள் வைக்கவும் அனுமதியில்லை என கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் வெளியிட்ட நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சசிகலா கிருஷ்ணகிரி சென்றார். அங்கும் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெண்கள் பலர் ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாணியம்பாடி நெக்குந்தி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் மேளதாளம் முழங்க, இசைக்கச்சேரி, புலியாட்டம் என்று நடத்தியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு, மேல்விஷாரம், எஸ்எஸ்எஸ் கல்லூரி ஆகிய இடங்களில் கட்சியினர் திரண்டனர்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகனங்களை போலீசார் தடுத்தால் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இவ்வாறு சசிகலாவுக்கு அளித்த வரவேற்பால் சென்னை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் சரக்கு வாகனங்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் ஏன் ஆம்புலன்சும் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டன. பல ஊர்களில் பல மணி நேரம் நெரிசலில் சிக்கினர். இதனால் 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வாகனங்கள் போய் சேரவில்லை. கோவை மற்றும் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நேற்றுதான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. சசிகலாவின் வருகையால் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமலும், வாகனங்கள் கிடைக்காமலும் அவதிப்பட்டனர். குறிப்பாக மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டோல்கேட்டுகளில் சசிகலா மற்றும் அவருடன் வந்தவர்களின் வாகனங்கள் வந்ததால் மற்ற மக்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இதனால் டோல்கேட்டை கடப்பதற்கே மக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். சசிகலாவின் வருகையால் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் திணறினர்.

Tags : districts ,volunteers ,Sasikala , Sasikala, volunteers, traffic, vulnerability
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை