மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் நெல்லிமலை அடிவாரத்தில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நேற்று துவங்கியது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 9-வது யானைகள் நலவாழ்வு முகாம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி நெல்லிமலை அடிவாரத்தில் நேற்று துவங்கியது.

மார்ச் 23ம் தேதி வரை 48 நாட்கள் இந்த முகாம் நடக்கிறது. முகாமில் 21 கோயில் யானைகள், மடங்களை சேர்ந்த 3 யானைகள், புதுவையை சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 26 யானைகள் முகாமில் பங்கேற்றுள்ளன. முகாமில் யானைகளை பாகன்கள் குளிப்பாட்டி, அதற்கு நெற்றிப்பட்டம் கட்டி பட்டுத்துணியால் அலங்கரித்து வரிசையாக நிறுத்தி வைத்தனர். முகாம் துவங்குவதற்கு முன்பு பவானி ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் மாலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கியது. யானைகளுக்கு வழங்குவதற்காக கரும்பு, அன்னாசி, ஆப்பிள் பழம், வாழைப்பழம், சத்து டானிக் ஆகியவை வாளிகளில் வைக்கப்பட்டன. முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, வரிசையில் அணி வகுத்து நின்ற யானைகளுக்கு அமைச்சர்கள் ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு, கரும்பு ஆகியவற்றை வழங்கினர். அதன்பின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமில் உள்ள உணவுக்கூடம், சமையல் கூடம், யானைகளுக்கு ஊட்டச்சத்து மருந்து, மாத்திரைகளை பார்வையிட்டனர். முகாமில், கலந்து கொண்ட அனைத்து யானைகளும் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டன. ஒரு சில யானைகள் நீண்ட நாட்களுக்கு பிறகு சக யானைகளை பார்த்த மகிழ்ச்சியில் தும்பிக்கையால் அவற்றை அணைத்து கொண்டன.

Related Stories:

>