போராட்டம் வலுப்பதால் மியான்மரில் ஊரடங்கு அமல்

யங்கூன்,: மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறிவந்த ராணுவம், கடந்த வாரம் திடீரென ஆட்சியை பிடித்தது. அரசு ஆலோசகர் ஆங் காங் சூகி மற்றும் அதிபர் வின்ட் மைண்ட் உட்பட முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகி மற்றும் அதிபர் உள்பட அனைத்து தலைவர்களை விடுவிக்ககோரி, மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மியாவாடியில் போராட்டம் நடத்தியபோது கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறையற்ற முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யங்கூன், மண்டாலே நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொது இடத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட ராணுவம் தடை விதித்துள்ளது.

Related Stories:

>