×

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த 18 வயது சிறுமியை எதிரியாக மத்திய அரசு கருதுவது ஏன்?: மக்களவையில் காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய ஸ்வீடனை சேர்ந்த 18 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேடா துன்பர்க்கை மத்திய அரசு எதிரியாக கருதுவது ஏன்’ என மக்களவையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரம் காரணமாக மக்களவை தொடர்ந்து அமளி நிலவி வந்த நிலையில், நேற்று அவை தொடங்கியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.

அப்போது பேசிய காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘குடியரசு தின விழா டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதன் பின்னணி பெரிய சதி உள்ளது. நீங்கள் விவசாயிகளை பொறி வைத்து சிக்க வைத்துள்ளீர்கள். அவர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து விவசாயிகளை பயமுறுத்துகிறீர்கள். செங்கோட்டையில் அவ்வளவு பேர் நுழைய எப்படி அரசு அனுமதித்தது? இதைப் பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும், இதைப் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும், ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான 18 வயது சிறுமி துன்பர்க்கை கூட மத்திய அரசு எதிரியாக கருதி அஞ்சுவது ஏன்?’’ என்றார்.

திமுக எம்பி. டிஆர். பாலு பேசுகையில், ‘‘திமுக அடிப்படையிலேயே விவசாயிகள் நலனுக்கான கட்சியாகும். விவசாயிகள் 74 நாட்களாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 12 பேரை அரசு கைது செய்துள்ளது. மாநில அதிகாரத்துக்குட்பட்ட கல்வித்துறையை மத்திய அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களின் வேலைகளில் ஓபிசி. பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை தராதது ஏன்? உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் 50% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தர மறுக்கிறது.

தமிழை மத்திய அரசின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்படாதது வெட்கக் கேடானது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 7 பேரையும் மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும். தற்போது குடியரசு தலைவர் கையில் இருக்கும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும்’’ என்றார். விவாதம் நேற்று நள்ளிரவு வரை நீட்டிக்கப் பட்டது.

Tags : government ,struggle ,Congress ,Lok Sabha , Farmers, Central Government, Lok Sabha, Congress, Question
× RELATED உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு...