×

பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் கடும் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடக்கின்றன. இதற்காக நான்கு மாடவீதிகள், பழைய மாமல்லபுரம் சாலை உள்பட பல்வேறு தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டிகுழாய்கள் புதைக்கப்படுகின்றன. இந்த பணிகள் ஆமைவெகத்தில் நடப்பதாகவும், ஆங்காங்கே தோண்டிய பள்ளங்கள் மூடாமல், ஆபத்தாக திறந்து கிடப்பதாகபுகார்கள் எழுந்தன. மேலும், வரும் 16ம் தேதி தொடங்கி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரமோற்சவம் நடக்கஉள்ளது. இதன் ஒரு நிகழ்ச்சியாக வரும் 23ம் தேதி நான்கு மாடவீதிகளிலும் பிரமாண்ட தேரோட்டம் நடைபெறும். பாதாள சாக்கடை பள்ளங்களால், தேரோட்டம் பாதிக்கப்படலாம் என்பதால், இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதைதொடர்ந்து, செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது. இதையடுத்து, திருப்போரூர் கூடுதல் வட்டாட்சியர் சத்யா, சென்னை குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ஷோபனா, திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சித்ரா, திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் முகம்மது காதர் ஆகியோர் திருப்போரூர் பேரூராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் நான்கு மாடவீதிகளையும் பார்வையிட்டனர்.

அப்போது, நான்கு மாடவீதிகள் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையை பார்வையிட்ட அவர்கள், வரும் 15ம் தேதிக்குள் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் புதிய சாலைப்பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், மாசி மாத பிரமோற்சவத்தை யொட்டி தேரோட்டம் தடையின்றி நடக்க நான்கு மாடவீதிகளில் வீடுகள், கடைகளின் முன்பு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிமென்ட் ஓடு கூரைகளை அகற்றவும், மரக்கிளைகளை வெட்டவும் அறிவுறுத்தினர்.

அதேபோல், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பறை, குடிநீர், பொது சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருவிழா நாட்களில் தீயணைப்பு துறை வாகனத்தை நிறுத்தி வைக்கவும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Tags : Roads , Thiruporur, Sewerage, Roads, Authorities, Inspection
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...