×

சசிகலாவை வரவேற்று போஸ்டர்: திருப்போரூரில் பரபரப்பு

திருப்போரூர்: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கிய அவர், நேற்று காலை கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த பல நிர்வாகிகளும், சசிகலாவை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்களை ஒட்டினர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் செல்வராஜ் என்பவர், திருப்போரூர் பகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்துடன் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டினார்.

அதேபோன்று அமமுக நகர செயலாளர் விஜயன், மாவட்ட இணை செயலாளர் மாலா ரவிச்சந்திரன் ஆகியோரும் சசிகலாவை வரவேற்று பஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஓஎம்ஆர். சாலை, இள்ளலூர் சந்திப்பு உள்பட பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டினர். இதையறிந்ததும், அதிகாலை முதல் இந்த போஸ்டர்கள் அனைத்தையும் அதிமுகவினர் கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தவேளையில், திருப்போரூர் தொகுதியில் வெற்றி பெற்று தகுதியிழப்பு செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கோதண்டபாணி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் முட்டுக்காடு முனுசாமி ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் சசிகலாவை வரவேற்க அமமுகவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

காஞ்சிபுரம்: சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டு தண்டனை காலம் முடிந்து, அபராத தொகை 10 கோடி செலுத்திய பின்னர், கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு சில நாட்கள் முன் சசிகலாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை நேற்று காலை பெங்களூருல் இருந்து புறப்பட்ட சசிகலா அத்திப்பள்ளி வழியாக தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் வழிநெடுக காத்திருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லை பகுதியான தாமல், பாலுசெட்டிசத்திரம் ஆகிய பகுதிகளில் அதிமுக, அமமுக தொண்டர்கள் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி சசிகலாவுக்கு வரவேற்பளித்தனர். மேலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வந்த தொண்டர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்து வரவேற்பளித்தனர். இதனை முன்னிட்டு பாலுசெட்டி சத்திரம், கீழம்பி, வெள்ளைகேட் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட அமமுக செயலாளர் மொளச்சூர் பெருமாள், நிர்வாகிகள் மனோகரன், வேளியூர் தனசேகரன் ஆகியோர் செய்தனர்.

Tags : Sasikala, poster, sensation
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...