×

4 ஆண்டு சிறை, கொரோனா தாக்குதல் முடிந்து பெங்களூரில் இருந்து சென்னை வந்தார் சசிகலா: வழிநெடுகிலும் வரவேற்பு, அதிமுகவினருக்கு திடீர் அழைப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தேவனஹல்லியில் உள்ள ரிசார்ட்டில் தங்கி 7 நாட்கள் ஓய்வுவெடுத்தார்.
இந்தநிலையில், ஓய்வை முடித்துக்கொண்டு திட்டமிட்டப்படி நேற்று காலை 7.45 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டார்.  புரோகிதர்கள் குறித்துக்கொடுத்த 7.45 மணிக்கு அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதாவின் காரில் புறப்பட்டார்.  சசிகலாவுடன் டி.டி.வி தினகரன், வெங்கடேஷ்,  வக்கீல் செந்தூர் பாண்டியன், உறவினர் இளவரசி, அவரது மகன் விவேக்,  சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் உடன் பயணித்தனர். உறவினர்கள் மட்டுமே 10க்கும் மேற்பட்ட கார்களில் பயணம் செய்தார். பின்னர், 200 முதல் 300 கார்கள் அவரை பின்தொடர்ந்தபடி ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றது.

இந்த வாகனங்கள் அணி வகுப்பால் தேவனஹள்ளி டோல்கேட் அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு-ஓசூர் சாலையில் சசிகலா வரும் போது   வழித்துணை ஆஞ்சநேயசாமி கோயிலில் சசிகலா தரிசனம் செய்தார். ஓசூர் அடுத்த ஜூஜூவாடி என்ற தமிழக எல்லைப்  பகுதிக்குள் காலை 10.45 மணிக்கு சசிகலாவின் கார் வந்தது. அப்போது, ஓசூர் டிஎஸ்பி மற்றும் மாவட்ட  வருாய் அலுவலர் ஆகியோர் காரை வழி மறித்தனர். பின்னர், காரில் இருந்த கட்சிக்  கொடியை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர். அப்போது போலீசாருக்கும்,  தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   பின்னர், கொடி கட்டப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி என்பரின் காருக்கு மாறினார். அதே காரில் அவர் சென்னை நோக்கி பயணத்தை தொடங்கினார்.  வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே வரும் போது சசிகலா காரில் இருந்தவாரே தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:

 அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால், அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன். தொண்டர்களுக்காக நிச்சயமாக தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அமைச்சர்கள் புகார்கள் கொடுப்பது அவர்களின் பயத்தையே காட்டுகிறது. விரைவில் மக்களை சந்திப்பேன். சந்திக்கும் போது விரிவாக பேசுவேன் என்றார். அதிமுக தலைமை அலுவலகம் செல்வீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றும், அதிமுகவை கைப்பற்றுவீர்களா என்ற கேள்விக்கு, இதுகுறித்து விரைவில் உங்களை சந்திக்கிறேன். அப்போது விரிவாக பேசுகிறேன் என்றார்.  குறிப்பாக, சசிகலாவின் பயண விவரத்தின்படி அவர் நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை வந்தடைவதாக இருந்தது. ஆனால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் அவர் நேற்று நள்ளிரவு தான் சென்னை வந்தடைந்தார்.

சென்னை திரும்பிய 10 எம்எல்ஏக்கள்
சசிகலா ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது அவரை சந்திக்க பெங்களூருக்கு 10 அதிமுக எம்எல்ஏக்கள் சென்றிருந்தனர். அவர்கள் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். சென்னை திரும்பியதும் உங்களை வந்து பார்க்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ‘நான் கூறும்வரை அமைதியாக இருங்கள். நான் சொல்லும்போது வெளியில் அடையாளம் காட்டினால் போதும்’ என்று சசிகலா அவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அந்த 10 பேரும் சசிகலாவிற்கு முன்பாகவே சென்னை திரும்பியுள்ளனர்.

2 கார்கள் எரிந்து நாசம்
சசிகலாவை வரவேற்க, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே திரண்ட தொண்டர்களின் கார்கள், டோல்கேட் அருகே காலி இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அவரது வருகைக்கு முன்னதாகவே, தொண்டர்கள் திடீரென பட்டாசுகளை வெடித்தனர். அப்போது, கதவு திறந்த நிலையில் நின்றிருந்த ஒரு காரில் தீப்பொறி பட்டு திடீரென எரியத் தொடங்கியது. பின்னர், மளமளவென பரவத்தொடங்கிய தீ, அருகே இருந்த மற்றொரு காருக்கும் பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களை விரைந்து அப்புறப்படுத்தினர். தகவலின் பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால்,அதற்குள் 2 கார்களும் முழுவதுமாக எரிந்து நாசமானது.

ஜெயலலிதா போல்...ஜெயலலிதா  போன்று தன்னை அலங்கரித்து கொண்ட சசிகலா, பச்சை நிற புடவை, குங்குமப்பொட்டு, நாமம் வைத்திருந்தார். சசிகலாவுக்கு கார் கொடுத்தவர் உள்பட 7 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் சசிகலா சென்னை வரும்போது கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கெடு விதித்தனர். இதனால் பெங்களூரில் இருந்து ஜெயலலிதாவின் காரில் சசிகலா வந்தார். தமிழக எல்லை வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சம்பங்கியின் காரில் பயணம் செய்தார். இதனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரைப் போல, வரவேற்பில் கலந்து கொண்டதற்காக ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் சந்திரசேகர ரெட்டி, ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்சி தகவல் தொழில் நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த் குமார், ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆனந்த், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

Tags : Sasikala ,Chennai ,jail ,corona attack ,Bangalore ,AIADMK , Sasikala arrives in Chennai from Bangalore after 4 years in jail, corona attack: Welcome along the way, sudden call to AIADMK
× RELATED புழல் மத்திய சிறைச்சாலை எதிரே பழுதான குடிநீர் பைப்லைன் சீரமைப்பு