×

ஆன்லைன் தளத்தில் தொடர்புகொண்டு கெஜ்ரிவால் மகளிடம் ரூ.34,000 சுருட்டல்: வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

புதுடெல்லி: இ-காமர்ஸ் தளத்தின் மூலம் முதல்வர் கெஜ்ரிவாலின் மகளிடம் ரூ.34.000 பணத்தை ஓருவர் மோசடி செய்து தப்பினார். அவரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேடி வருகின்றனர். முதல்வர் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, இ-காமர்ஸ் தளம் ஒன்றில் சோபா ஒன்று விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்து அதற்கான புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த நபர் ஒருவர், சோபாவை வாங்கிக்கொள்வதாக ஹர்ஷிதாவை தொடர்புகொண்டு கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்ததோடு, பணம் அனுப்புவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்பக்கோரினார். இதனை நம்பி ஹர்ஷிதா வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார்.

அப்போது, சரியான கணக்குதான் என்பதை சரிபார்க்க குறைந்த அளவு தொகையை மட்டும் முதலில் அனுப்புவதாகவும், அதன்பின் மீதித்தொகையை அனுப்புவதாகவும் கூறினார். அதன்படி சிறிய தொகையை அனுப்பினார். அதன்பின்னர் மீதித்தொகையை ஹர்ஷிதா வங்கி கணக்கிற்கு மாற்ற க்யுஆர் கோடு ஒன்றை அந்த நபர் அனுப்பி அவர் கூறுகிறபடி அந்த லிங்கை கிளிக் செய்யக்கூறினார். அதன்படி கிளிக் செய்து க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்தபோது, மீதிப்பணத்தை ஹர்ஷிதாவுக்கு மாற்றுவதற்கு பதிலாக, அவரது கணக்கிலிருந்து ரூ.20,000 பணத்தை அந்த நபர் அவரது கணக்கிற்கு மாற்றிக்கொண்டார்.

இதுபற்றி அந்த நபரை தொடர்புகொண்டு கேட்டபோது, தவறுதலான க்யூஆர் கோட்டை அனுப்பிவிட்டதாகவும், தற்போது மீண்டும் ஒரு க்யூஆர் கோட்டை அனுப்புவதாகவும், அதில் மொத்த தொகைகையும் அனுப்பி வைப்பதாக கூறி க்யுஆர் கோட்டை அனுப்பினார். அதனை ஹர்ஷிதா ஸ்கேன் செய்தபோது, மீண்டும் அவரது கணக்கிலிருந்து ரூ.14,000 பணத்தை அந்த நபர் சுருட்டினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சிவில் லைன்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Tags : Kejriwal , Kejriwal's daughter allegedly robbed of Rs 34,000 by contacting online site
× RELATED டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால்...