×

மபி மாஜி முதல்வர் கமல்நாத் உறவினர்கள் கொலையில் குற்றவாளிகள் 2பேர் சிக்கினர்: 72 மணி நேரத்தில் போலீசார் அதிரடி

நொய்டா: மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரின் உறவினரான வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட 72 மணிநேரத்திற்குள் உத்தரபிரதேச போலீசார் குற்றவாளிகள் இருவரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். மத்திய பிரசேத முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் உறவினர்கள் நரேந்திர நாத்(70) மற்றும் அவரது மனைவி சுமன்(65), இவர்கள் இருவரும் கடந்த வௌ்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அவர்களது வீட்டில் சடலத்தை போலீசார் மீட்டனர். இதுகுறித்து நொய்டாவின் பீட்டா-2 உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தம்பதியின் உறவினர்கள் அளித்த தகவலின்படி, சந்தேக வளையத்தில் சிலரை கொண்டு வந்து விசாரித்த போலீசார் அதனடிப்படையில் ரோகித் பால்மிகி என்பவனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல் மற்றும் கொலை செய்ததற்கான காணரம் குறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட நாத், ரோகித்திற்கு கடனாக ரூ.2 லட்சம் வட்டிக்கு கொடுத்துள்ளார். இதற்காக ரோகித் தனது இருசக்கர வாகனத்தை அடமானமாக நாத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், வாங்கிய கடனை திரும்ப செலுத்த விரும்பாத ரோகித், நாத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த தனது நண்பர்கள் தேவ் சர்மா, பிஷன்சிங் பகதுவரியா மற்றும் உத்தரபிரேசத்தை சேர்ந்த சுபாஷ் அயிர்வார் உதவியை நாடினார். அவர்களை நொய்டாவுக்கு வரவழைத்து இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தார் ரோகித். திட்டப்படி, கடந்த வியாழக்கிழமையன்று இரவு நாத் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நால்வரும் சென்றுள்ளனர். பின்னர் அன்றைய இரவில், நாத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து குடியிருப்பின் கீழ் தளத்தில் உடலை வீசினர். அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு உடலை மொட்டை மாடிக்கு கொண்டு சென்று வீசினர்.

அதன்பின், வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.30,000, நகை, மற்றும் ஏடிஎம் அட்டைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தப்பினர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த நண்பர்கள் தேவ் சர்மா மற்றும் பிஷண் சிங் இருவரையும் ஓலா கார் புக் செய்து மபிக்கு அனுப்பி வைத்தார் ரோகித். அடுத்தநாள் தகவல் தெரிந்து போலீசார் தம்பதியின் வீட்டில் உடல்களை மீட்டனர். உறவினர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ரோகித்தை சந்தேக வலையளத்திற்குள் கொண்டு வந்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அவரது செல்போன் அழைப்பு விவரங்களை சேகரித்து மபிக்கு தப்பிச்சென்ற கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அனுப்பட்டது. ஆனால், தகவல் தெரிந்து அவர்கள் அங்கிருந்து தப்பி மீண்டும் கிரேட்டர் நொய்டாவுக்கு வந்தனர். எனினும், அவர்களில் ஒருவனை கிரேட்டர் நொய்டா அருகேயுள்ள சுகத்பூர் கிராமம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் மடக்கி கைது செய்தனர். மற்றொருவரான ரோகித்தை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். குற்றவாளிகள் நான்கு பேரில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற இருவர் தப்பி சென்று தலைமறவைாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Kamal Nath ,murder ,relatives ,Police action ,Mabi , Two accused in the murder of Mabi former chief minister Kamal Nath's relatives have been caught: Police action in 72 hours
× RELATED மபி முன்னாள் முதல்வர் கமல்நாத் மகனுக்கு ரூ.700 கோடி சொத்து