பெங்களூரு ஐஐஎச்ஆர் வளாகத்தில் தேசிய தோட்டக்கலை மாநாடு தொடங்கியது: விவசாயிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை

பெங்களூரு: பெங்களூருவில் தேசிய தோட்டக்கலை மாநாடு தொடங்கியது. டெல்லியில் இருந்தப்படி காணொலி மூலம் மாநாட்டை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தொடங்கி வைத்தார். பெங்களூரு ஹெசரகட்டாவில் இயங்கிவரும் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தோட்டக்கலை மாநாடு நடத்துவது வழக்கம். இவ்வாண்டிற்கான மாநாட்டை பிப்ரவரி 8 முதல் 12ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இவ்வாண்டு மாநாடு ஹெசரகட்டாவில் உள்ள தேசிய தோட்டகலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று தொடங்கியது.

‘‘ஸ்டார்ட் ஆப் மற்றும் ஸ்டாண்ட் ஆப் இந்திய தோட்டக்கலை’’ என்ற பெயரில் 5 நாட்கள் நடக்கும் மாநாட்டை நேற்று காலை 11 மணிக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங்தோமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘‘ ஆர்க் வியாபார்’’ என்ற செயலியை மத்திய வேளாண்துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்திரி வெளியிட்டார். மாநாட்டில் வாழும் கலை மைய நிறுவனர் ரவிசங்கர் குருஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேரூரை ஆற்றினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய (ஐசிஎம்ஆர்) இயக்குனர் ஏ.கே.சிங், திரிலோச்சன் மஹாபத்ரா, இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எம்.ஆர்.தினேஷ் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர். பகல் 2.45 மணிக்கு கர்நாடகா, கேரளா, லட்சதீவு ஆகிய மாநில விவசாய உற்பத்தி மைய இயக்குனர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. மாநாடு நடக்கும் 5 நாட்களும் அனைத்து மாநில தோட்டகலை பயிர் செய்யும் விவசாயிகளுடன் ஆலோசனை நடக்கிறது.

மேலும் மாநாட்டில் பல மாநிலங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்துள்ள விளை பொருட்களும் கண்காட்சியில் இடம் பெறுகிறது. மாநாடு நடக்கும் வளாகத்தில் 125 கண்காட்சி அரங்குகள், 287 புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

Related Stories:

>