அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சிதிலமடைந்துள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பெங்களூரு கே.பி. அக்ரஹாரா மாகடிரோடு சாலையில் உள்ள கன்னட மற்றும் ஆங்கில தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிதலமடைந்து கிடக்கும் சிறுவர்கள் விளையாட்டு, உபகரணங்களால் மாணவர்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 6வது வகுப்பு முதல் கல்லூரிகள் வரை செயல்பட மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் தொடக்கப்பள்ளிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. விரைவில் தொடக்கப்பள்ளிகளை துவங்குவதற்கான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு

வருகிறது.

அதே நேரம் தொடக்கப்பள்ளிகளில் உள்ள வளாகங்கள் திறந்த நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் மற்றும் பள்ளியின் அருகே வசித்து வரும் மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல்கள், சறுக்குகள், கம்பி வளையங்கள் பயன்பாட்டில் தான் இருக்கிறது. பல மாதங்கள் புனரமைப்பு இல்லாமலும், பராமரிப்பு இல்லாமலும் மக்கள் இந்த உபகரணங்களை பயன்படுத்தி வருவதால், தற்போது அவை சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பெங்களூரு கே.பி அக்ரஹாரா மாகடிரோடு பகுதியில் உள்ள கன்னட ஆங்கில தொடக்கப்பள்ளி ஒன்றில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பழமையான இந்த பள்ளியை யொட்டி அமைந்துள்ள மைதானத்தில் காலை, மாலையில் மக்கள் கூட்டம் அலைமோதும். கிரிக்கெட் விளையாடுபவர்கள்தான் அதிகம். மேலும் சைக்கிள் ஓட்ட கற்று கொள்ளும் சிறுவர்கள், பைக், கார் ஓட்ட கற்று கொள்பவர்கள் இந்த மைதானத்தை அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பல்வேறு வழிமுறையில் அக்ரஹாரா மக்களுக்கு இந்த அரசு பள்ளி மைதானம் உதவி கரமாகவுள்ளது. ஆனால் இந்த மைதானத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பைபர் சறுக்குகள், இரும்பு வளையங்கள், சங்கிலியால் ஆன படிக்கட்டுக்கள் புனரமைக்கப்படாமல் எளிதில் அறுத்து விழும் நிலையில் உள்ளது.

மேலும் சறுக்குகளின் இடையில் இருக்கும் பெரியளவிலான ஓட்டைகளால், சிறுவர்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் இந்த சறுக்குகளில் உள்ள கம்பிகள் குத்தியதில் ஏராளமான சிறுவர்கள் காயமடைந்து, இன்னும் புண் மற்றும் தழும்புகள் ஆராமல்தான் சுற்றி திரிகின்றனர். அதேபோன்று படிக்கட்டுகளுக்கு பதிலாக சங்கிலி பயன்படுத்தப்படுவதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் அவை அறுந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இந்த விளையாட்டு உபகரணங்களைதான் பள்ளி மாணவர்கள் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

விளையாட்டு மைதானம் மிகவும் பெரிதாக இருப்பதால், உடற்பயிற்சி செய்வதற்கான கம்பிகள் மற்றும் கூடுதலான விளையாட்டு உபகரணங்களை நிறுவ வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனால் சிறுவர்கள் வேறு இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படாது. வீட்டிற்கு அருகிலேயே விளையாடி கொள்வார்கள் என்று சிறுவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கான நடவடிக்கையில் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அமைச்சகம் தான் ஈடுபடவேண்டும். லோக்கல் கவுன்சிலர்கள் இருந்தால் அவர்களை வைத்து அரசு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு புனரமைத்து விடுவார்கள்.

ஆனால் கவுன்சிலர்கள் பணி காலம் முடிந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் நேரடியாக பள்ளி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் விளையாட்டு உபகரணங்களை புனரமைப்பது அல்லது புதிய விளையாட்டு உபகரணங்களை கொண்டு வந்து பொருத்தினால், அவை பள்ளி சிறுவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் உதவிகரமாக அமையும். ஆனால் எப்பொழுது இந்த மாற்றம் அமையும் என்று கே.பி அக்ரஹாரா மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சறுக்குகளின் இடையில் இருக்கும் பெரியளவிலான ஓட்டைகளால், சிறுவர்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

* தண்ணீர் தொட்டி இருக்கு கால்வாய்  இல்லை

கே.பி அக்ரஹாரா நேதாஜிரோடு 6வது கிராசில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டிகள் உள்ளது. தெரு குழாய்களில் நீர் பிடிக்க விரும்புபவர்கள் இந்த தண்ணீர் தொட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வாறு மக்கள் பயன்படுத்தும்போது, நிரம்பி வழியும் நீர் மற்றும் அந்த தெருக்களில் மழை நேரங்களில் பெருக்கெடுக்கும் நீர், சாலையில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக சாலையோர சுவர்களையொட்டித்தான் கால்வாய் அமைக்கப்படும். ஆனால் இந்த பகுதியில் சாலைகள் இருந்தும், சாலையோர கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. தண்ணீர் தொட்டியை தொடர்ந்து சிறிது தொலைவில் கால்வாய் இருந்தாலும், அவை பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. இதனால் சேறும் சகதியுமாக அந்த சாலை காட்சியளிக்கிறது. கொரோனா தொற்று பீதியில் இருந்து மீண்டும் வரும் மக்கள் தற்போது, இந்த சேறு, சகதியான சாலையில் உற்பத்தியாகும் கொசுக்களாலும், துர்நாற்றத்தாலும், மூச்சு திணறல், டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.

* பாரம்பரிய குடிசை தொழிலில் கொடிகட்டி பறக்கும் கே.பி அக்ரஹாரா

தென்தமிழகமான தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி ஆகிய மாவட்டங்களில் குடிசை தொழில்கள், கூலி தொழில்கள் செய்பவர்கள் அதிகம். படித்த இளைஞர்களும் வெளியூர் சென்று வேலை செய்யவேண்டுமென்று துடிப்புடையவர்கள். அதன்படி பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு கே.பி அக்ரஹாரா பகுதிக்கு வந்த தென் தமிழக மக்கள், குடிசை தொழிலாளான மிட்டாய் தயாரிக்கும் பணிகளை தொடங்கினர். இயற்கை பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த மிட்டாய்க்கு, பெங்களூரு மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வேர் கடலையை கொண்டு செய்யப்படும் மிட்டாய்களுக்கு வரவேற்பு அதிகம்.

சகோதர பாசத்துடன் ஒருவருக்கு ஒருவர் எந்தவிதமான இடையூறு செய்யாமல் இவர்கள் செய்து வரும் குடிசை தொழில்கள், தென் தமிழக மக்களை அதிகளவு பெங்களூரு வருவதற்கு ஈர்த்துள்ளது. பல தலைமுறைகளாக இங்கு வசித்து வரும் மக்கள் எக்காரணத்தை கொண்டு தங்கள் சொந்த ஊரை மறப்பது இல்லை. பொங்கல், கோயில் திருவிழா, உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் தவறாமல் கலந்து கொள்வார்கள். தொழில் ஒரு கண் என்றால், உறவினர்கள் மற்றொரு கண்ணாக நினைத்து செயல்பட்டு வருகிறார்கள் கே.பி அக்ரஹாரா தமிழர்கள்.

கொரோனா காலக்கட்டத்தில் சிலருக்கு முறையான வியாபாரங்கள் இல்லை. பெரும்பாலானர்கள், தொழிலை தொடங்க முடியாமல் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது. இருப்பினும் தங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்ட அவர்கள் கொரோனாவை பொருட்படுத்தாமல், இழப்புகளையும் ஏவுகணையாக தாங்கி பிடித்து, தற்போது மீண்டும் தங்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் இந்த விடா முயற்சி மற்றும் கடின உழைப்பு தென் தமிழக மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வண்ணமாக அமைந்துள்ளது.

Related Stories:

>