பராமரிப்பு இன்றி கிடப்பில் போட்டதால் கால்நடைகள் மேயும் விளையாட்டு மைதானங்கள்: சீரமைத்து தர தங்கவயல் நகரசபைக்கு கோரிக்கை

தங்கவயல்: தங்கவயல் தங்க சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் இளைஞர்களின் உடற்பயிற்சி களமாக திகழ்ந்த விளையாட்டு மைதானங்கள், தற்போது கண்டு கொள்ள ஆள் இன்றி, புல் வளர்ந்து ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. தங்கவயல் தங்கசுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் தங்கச்சுரங்க நிறுவனம், தொழிலாளர்களின் பொழுது போக்கிற்காகவும், அதன் மூலம் உடல் பயிற்சி பெற்று ஆரோக்கியமாக வாழவும் விளையாட்டு அரங்கங்களை தங்க சுரங்க நிறுவனம் கட்டி (ஸ்போர்ட்ஸ் கிளப்) வைத்திருந்தது. சுரங்க பணி முடித்த பிறகு தொழிலாளர்கள் இந்த அரங்குகளில் கேரம், டேபிள் டென்னிஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுகளையும், அரங்கின் வெளியே மைதானத்தில் கால்பந்து, கபடி, பூபந்து போன்ற விளையாட்டுக்களை ஆடி தங்கள் பொழுதை பயனுள்ளதாக்கி கொண்டனர். இந்த அரங்குகளில் அறிவு திறனை வளர்த்து கொள்ள படிப்பகங்களும் இருந்தது. தங்கள் விளையாட்டு திறன் தகுதியால் அரசு வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்கள் ஏராளம்.

தங்க சுரங்கம் மூடப்பட்ட பிறகு, இந்த அரங்கங்களின் மீதான பராமரிப்பு இல்லாமல் போனது. இளைஞர்களுக்கு படிப்பகம், விளையாட்டுகளின் மீது ஆர்வம் குறைந்தது. இதனால் பகுதி தோறும் உள்ள இந்த விளையாட்டு அரங்கங்கள் பயன் பாட்டில் இல்லாமல் செயல் இழந்த நிலையில் உள்ளன. அன்றைய இளைஞர் சங்கங்கள் இந்த அரங்கங்களை பயன்படுத்தி, கால்பந்து, ஹாக்கி, கபடி, பேட்மிண்டன் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி உற்சாகப்படுத்தி மாவட்ட, மாநில, தேசிய அளவு விளையாட்டு வீரர்களை உருவாக்கியது. இப்படி மாரி குப்பம், சாம்பியன், உரிகம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருந்த விளையாட்டு அரங்கங்கள் இளைஞர்களின் ஆர்வ குறைவு காரணமாக பரிதாப நிலையில் உள்ளது.

அதில் சாம்பியன் ஐ கிரவுண்ட் என்று சாம்பியன் பகுதியின் இட அடையாளமாக திகழ்ந்த ஐ கிரவுண்ட் இன்று புல் முளைத்து சுற்றிலும் புதர் வளர்ந்து ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதே போல் மாரி குப்பம் பகுதியில் மைசூர் ஹால் கிரவுண்ட், உரிகம் பகுதியில் ஹாக்கி கிரவுண்ட் அனைத்தும் பயன் இன்றியும் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன.இவற்றுக்கெல்லாம் மேலே முக்கிய விளையாட்டு மைதானமாக இருந்த ஜிம்கான மைதானம் பி.இ.எம்.எல்.நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தில் சென்று விட்டதால் பொது பயன் பாட்டிற்கு இல்லாமல் மூடப்பட்டு விட்டது. தங்கவயல் நகரசபை ஒவ்வொரு வார்டிலும் பல லட்சம் செலவில் பெயரளவில் பூங்காக்களை அமைக்கிறது. அதற்கு பதிலாக தங்க வயலின் புகழ் பெற்ற விளையாட்டு மைதானங்களை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Related Stories:

>