×

நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

கூட்டணி முடிவாகாததால்  பரிதாபத்தில் சிறிய கட்சிகள்
புதுச்சேரியில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற அணிகளை ஒன்றிணைத்து 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதேபோல் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட  உள்ளன. இதற்கு என்.ஆர். காங்கிரசில் ஒருகோஷ்டி எதிர்ப்பு தெரிவித்து புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருப்பதால் ரங்கசாமிக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்டவை தொடர்ந்து மவுனமாக உள்ளன. கூட்டணி தொடர்பாக எந்த கட்சிகளும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முக்கியத்துவம் அளிக்காத நிலையில் ஒன்றிரண்டு சீட்டாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது.  தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சித் தலைமை புதுச்சேரி விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டுமென தலைமையிடம் இந்த கட்சிகளின் புதுச்சேரி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஐயப்பனை துணைக்கு அழைக்கிறது காங்கிரஸ்
கேரளாவில் இம்முறை குறைந்தபட்சம் 50 தொகுதிகளிலாவது வென்றால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதனால், கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டி வருகிறது. ஐக்கிய முற்போக்கு முன்னணியில் இடம் பெற்றுள்ள 2வது மிகப் பெரிய கட்சியான முஸ்லிம் லீக், கூடுதலாக 6 இடங்கள் கேட்டதற்கு 2 இடங்களை மட்டுமே வழங்க முடியும் என கூறியுள்ளது. கேரளா காங்கிரஸ் (ஜோசப்) 13 தொகுதி கேட்டதற்கு 9 இடங்களை மட்டுமே வழங்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதற்கிடையே, தென் கேரளாவில் பிரசாரத்தை தொடங்கிய முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சபரிமலை பிரச்னை குறித்து பேசினார். ஏனெனில், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்று உம்மன் சாண்டி நம்புகிறாராம். எது எப்படியோ, ஐயப்பனை வைத்து இந்த தேர்தலில் கரையேறி விடலாம் என்று நினைக்கிறது போலும் காங்கிரஸ்.

காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீட்டில் தீவிரம்
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடக்கிறது. இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் 193 தொகுதிகளில் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்டுக்கான 101 தொகுதிகளும், காங்கிரசுக்கான 92 தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில், இன்னும் 101 தொகுதிகள் பாக்கி உள்ளன. இதற்கிடையே, பிரபலமான பெங்காலி பேசும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த பீர்ஜாதா அப்பாஸ் சித்திக்கீ இந்திய மதச்சார்பற்ற முன்னணி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இக்கட்சியையும் கூட்டணியில் சேர்க்க காய் நகர்த்தப்படுகிறது. ஆனால் பீர்ஜாதா 44 தொகுதிகளை கேட்பதால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் யோசித்து வருகின்றன.

ஓரணியில் கைகோர்க்கும் பிராந்திய கட்சிகள்
அசாமில் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் எதிர்க்கட்சிகள் திரண்டு வருகின்றன. சிபிஎம், சிபிஐ, சிபிஐ-எம்.எல்.எல், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் கன மோச்சா ஆகியவை ஏற்கனவே மகாகத்பந்தன் என்கிற பிரம்மாண்ட கூட்டணியில் இணைந்துள்ளன. தற்போது அசாம் ஜாதிய பரிஷத் மற்றும் ரைஜோர் தால் கட்சிகளும் இணைந்துள்ளன. கடந்த முறை மும்முனை போட்டியாக பாஜ, காங்கிரஸ் தலைமையிலான அணிகளுடன் மூன்றாம் அணியும் போட்டியிட்டது. குறிப்பாக, அதிக வாக்கு வங்கிகள் கொண்ட அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்ற கட்சிகள் மூன்றாம் அணியாக நின்றதால் வாக்குகள் சிதறி, பாஜ வெல்ல காரணமாக இருந்தது. தற்போது பெரும்பாலான பிராந்திய கட்சிகளும் ஓரணியில் திரண்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர கடந்த தேர்தலில் பாஜவுடன் கூட்டணியில் இருந்த போடோலாந்து மக்கள் முன்னணியும் தற்போது பாஜவுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது.

Tags : Kerala ,New Delhi ,Assam ,West Bengal , Small parties in misery as the alliance is not over
× RELATED சராசரியை காட்டிலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்