×

ஈரோடு மாவட்டத்தில் எம்எல்ஏ அலுவலகங்கள் பல ஆண்டுகளாக மூடல்: அதிமுகவின் அலட்சியம் தேர்தலில் பிரதிபலிக்கும்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 எம்எல்ஏ அலுவலகங்களில் 4 அலுவலகங்கள் எப்போதும் மூடியே கிடப்பதால் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தொகுதி மக்கள் எம்எல்ஏக்களை சந்திக்க வசதியாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டது. இதனால், தொகுதி மக்கள் எம்எல்ஏக்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தும், எம்எல்ஏக்களை நேரில் சந்தித்தும் தீர்வு கண்டு வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் நேர் எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அலுவலகம் கடந்த 5 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது. எம்எல்ஏ தென்னரசை சந்திக்க வேண்டும் என்றால் காலிங்கராயன் விருந்தினர் இல்லத்திற்கு தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை.

இதேபோல், அந்தியூர் அதிமுக எம்எல்ஏ அலுவலகம் 10 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. எம்எல்ஏ ராஜாகிருஷ்ணனை சந்திக்க வேண்டும் என்றால் அந்தியூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு தான் செல்ல வேண்டும். கோபி தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான செங்கோட்டையனின் அலுவலகத்தின் நிலைமையும் இதே தான். இவரை சந்திக்க வீட்டிற்கு போனாலும் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் சந்திக்க விடுவதில்லை என்ற புகார் உள்ளது. பவானிசாகர் எம்எல்ஏ அலுவலகம் புஞ்சைபுளியம்பட்டியிலும், சத்தியமங்கலத்திலும் உள்ளது. இதில், சத்தியமங்கலம் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 4 தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பது சென்டிமென்டிற்காகவா? அல்லது தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் மீதான அலட்சியமா என்பது தெரியாத நிலை உள்ளது. இதற்கான பதில் இன்னும் 3 மாதங்களில் கிடைத்துவிடும் என்பது மட்டும் உறுதி என்கின்றனர் பொதுமக்கள்.



Tags : MLA offices ,district ,Erode ,AIADMK ,election , MLA offices in Erode district closed for several years: AIADMK's negligence will be reflected in the election
× RELATED மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு