குலாம்நபி ஆசாத்தின் எம்பி பதவிகாலம் முடிவதால் மாநிலங்களவையில் காங். எதிர்கட்சி தலைவர் யார்?...கார்கே, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா இடையே போட்டி

புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடியவுள்ளதால், அடுத்த தலைவர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு கட்சிக்குள் எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவர் பதவி என்பது, மத்திய அமைச்சர்களுக்கு இணையான பதவியாகும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக குலாம்நபி ஆசாத், தற்போது மாநிலங்களவையில் எதிர்கட்சி  தலைவராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஆனந்த் சர்மா மாநிலங்களவையில் கட்சியின் துணை தலைவராக உள்ளார்.

இந்நிலையில் மாநிலங்களவை  உறுப்பினர் என்ற அடிப்படையில் குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15ம் தேதி வாக்கில் முடியவுள்ளது. அதனால், மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் எதிர்கட்சி தலைவராக யாரை நியமிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு சில மாநிலங்களில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் மாநிலங்களவை  உறுப்பினராக மீண்டும் குலாம்நபி ஆசாத்தை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. இவ்வாறு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரியவில்லை.

வரும் சில நாட்களில் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிவதால்,  மாநிலங்களவையில் காங்கிரசின் துணைத் தலைவராக உள்ள ஆனந்த் சர்மா, மூத்த தலைவரான முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய் சிங் போன்ற தலைவர்களில் ஒருவர் எதிர்கட்சி  பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனவரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரியும் முடிந்துவிட்டது.

ஆனால், 5 மாநில தேர்தலுக்கு முன் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் என்றும் தகவல்கள்  கூறுகின்றன. இதற்கிடையே யாரை மாநிலங்களவையின் எதிர்கட்சி தலைவராக கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி நியமிக்கப் போகிறார்? என்பது கேள்வியாக உள்ளது. காரணம் தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர்  நடைபெற்று வருவதால், உடனடியாக மாநிலங்களவை எதிர்கட்சி தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘எதிர்கட்சி தலைவர் பதவி மல்லிகார்ஜூன கார்கேவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அவர் 2019ல் நடந்த தேர்தலுக்கு முன் ஏற்கனவே மக்களவையில் ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் கட்சித்  தலைவராக இருந்தார். கடந்தாண்டு கட்சித் தலைமைக்கு எதிராக கடிதங்கள் எழுதிய 23 மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. இருப்பினும், குலாம்நபி ஆசாத்தின் பதவியை பிடிக்க  ப.சிதம்பரமும் ஆர்வம் காட்டுகிறார். ஆளும் பாஜகவை மாநிலங்களவையில் எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த ப.சிதம்பரத்துக்கு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Related Stories:

>