×

10 மாத இடைவெளிக்கு பிறகு நேரடி வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட் திறப்பு!: வழக்கறிஞர்கள் வரவேற்பு

சென்னை: 10 மாத இடைவெளிக்கு பிறகு நேரடி வழக்கு விசாரணைக்காக நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவற்றில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடியாக வழக்கு விசாரணையை நடத்த நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கறிஞர்கள் விரும்பினால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் முழுமையாக திறக்கப்பட்ட போதிலும் வழக்கறிஞர்கள் அறை திறக்கப்படாதது கவலை அளிப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி விசாரணை வழக்குகள் மட்டுமே காலை, மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும் என்றும் மற்ற வழக்குகள் காணொலி வாயிலாகவே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்கள் முழுமையாக திறக்கப்பட்டாலும், உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை ஒருசில வழக்குகள் நேரடி விசாரணை முறையிலும் மற்ற வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வழக்கறிஞர் சங்கம் மோகன கிருஷ்ணன் தெரிவித்ததாவது, கொரோனா பாதிப்பின் காரணமாக காணொலி மூலம் மிக சிரமப்பட்டு வழக்குகளை வாதாடி வருகின்றோம்.

வாதங்களை சிறப்பான முறையில் எடுத்துரைக்க முடியவில்லை. வழக்கு தாக்கல் செய்யும் முறையிலும், தீர்வு காண்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த சூழலில் இன்றய தினம் சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் திறப்படுவதாக அறிவிக்கப்பட்டு அறிவிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இது பெரிதும் வரவேற்கக்கூடியது. வழக்கறிஞர் அறை திறக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என குறிப்பிட்டார்.


Tags : ICourt ,trial ,hiatus ,Lawyers , 10 month interval, live trial, iCourt opening
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...