×

இரு ஆண்டுக்கு பிறகு கல்லட்டி மலைப்பாதை வழியே செல்ல வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி-மாவட்ட எஸ்பி., தகவல்

ஊட்டி :  ஊட்டி - மசினகுடி இடையே கல்லட்டி மலைப்பாதையில் இரு ஆண்டுக்கு பிறகு வெளியூர், வெளி மாநில வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கப்படுவதாக மாவட்ட எஸ்பி., தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர், கர்நாடகாவின் குண்டல்பேட், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதுதவிர மசினகுடி வழியாக முதுமலை மற்றும் மைசூர் செல்ல கல்லட்டி மலைப்பாதை உள்ளது.

கூடலூர் சென்று செல்வதை காட்டிலும், இச்சாலையில் செல்வதால் தூரம் குறைவு என்பதால் பெரும்பாலான வாகனஓட்டிகள் கல்லட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். அபாயகரமான சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்க தெரிவதில்லை. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து  விபத்துக்கள் நடந்த வண்ணம் இருந்தது.

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பின்னரே உயிரிழந்த 5 பேருடன், இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தையடுத்து  இச்சாலையில் ஊட்டியில் இருந்து மசினகுடி ேநாக்கி வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் வாகனங்கள்  மட்டும் சென்று வர அனுமதிக்கப்படுகிறது. வெளியூர் வாகனங்கள் மசினகுடியில் இருந்து ஊட்டி நோக்கி வர மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படுவது முற்றிலும் குறைந்தது. இந்நிலையில் இச்சாலையில் மீண்டும் வெளியூர், வெளி மாநில வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று இன்று (8ம் தேதி) முதல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த கார்கள் சென்று வர காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி., சசிமோகன் கூறுகையில், கல்லட்டி சாலை ஊட்டியில் இருந்து மசினகுடி வரை 22.2 கி.மீ., தூரம் கொண்டது.

இச்சாலையில் செல்ல தலைக்குந்தாவில் உள்ள சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும். குறுகிய வளைவுகள் மற்றும் அதிக விபத்துகள் ஏற்பட்டு வந்ததால் கடந்த 2019ம் ஆண்டு முதல் வெளியூர் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் கல்லட்டி சாலையில் பிற மாவட்டம் மற்றும் மற்ற மாநிலங்களை சேர்ந்த கார் போன்ற இலகுரக வாகனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயக்க அனுமதிக்கப்படுகிறது.

தலைக்குந்தா சோதனை சாவடியில் உள்ள காவலர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களும் 2வது கியரில் தான் இயக்க வேண்டும். 20 கி.மீ., வேகத்திற்கு மிகாமல் இயக்க வேண்டும். லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கான தடை நீடிக்கும். இரவு நேரத்தில் கல்லட்டி சாலையில் சென்று வர அனைத்து வாகனங்களுக்கும் இருந்து வரும் தடை நீடிக்கும், என்றார்.

Tags : Kallatti Hill , Ooty: After two years on the Kallatti hill road between Ooty and Machinagudi, out-of-state vehicles were ordered to pass.
× RELATED விபத்துக்களை தவிர்க்க கல்லட்டி...