தச்சநல்லூர் குருநாதன் கோயில் பகுதியில் குழாய் கசிவால் வீணாகும் குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் அவலம்-மாநகராட்சி கவனிக்குமா?

நெல்லை : தச்சநல்லூர் குருநாதன் கோயில் பகுதியில் குழாய் கசிவால் வீணாக வெளியேறும் குடிநீர், சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் அவலம் தடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். நெல்லை மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலத்தில் நெல்லை டவுனில் இருந்து தொண்டர் சன்னதி, சாலியர் தெரு, ராமையன்பட்டி வழியாக சங்கரன்கோயில் செல்லும் சாலையில் குருநாதன் கோயில் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி இக்குழாய் மூடியில் ஏற்பட்ட கசிவால் மாதக்கணக்கில் குடிநீர் வீணாக வெளியேறும் அவலம் தொடர்கிறது. மேலும் இவ்வாறு வெளியேறும் குடிநீர் சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. பின்னர் அருகேயுள்ள வயல்வெளியில் குளம்போல் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால் அவதிப்படும் மக்கள் இதுகுறித்து பல முறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.

 இவ்வாறு மாதக்கணக்கில் வெளியேறும் குடிநீரால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் வாகனஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாவதாகவும் குற்றம்சாட்டினர். குழாய் உடைப்பால் தச்சநல்லூர் பகுதியில் பல்வேறு நாட்கள் குடிநீர் விநியோகம் தடைபடும் நிலையில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துவருவதாகவும் சாடினர்.

மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் பதிப்புக்காகவும், புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்காகவும் தோண்டப்பட்ட குழிகளும் முறையாக மூடப்படாததால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். குறிப்பாக பல்வேறு இடங்களில் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

எனவே, தச்சநல்லூர் பகுதியில் குடிநீர் கசிவதை தடுத்து தங்குதடையின்றி முறையாக குடிநீர் விநியோகம் செய்வதோடு சேதமடைந்த சாலையை சீரமைக்க இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories:

>