×

தேக்கம்பட்டியில் இன்று துவங்குகிறது நலவாழ்வு முகாமுக்கு 24 யானைகள் வந்தன

மேட்டுப்பாளையம் : தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான 9வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்கு துவங்கி தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற உள்ளது. முகாமை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை ஆணையாளர் டாக்டர் பிரபாகர், கோவை கலெக்டர் ராஜாமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முகாமில் பங்கேற்கும் யானைப்பாகன் உள்ளிட்ட ஊழியர்கள், கொரோனா பரிசோதனை எடுத்து, தொற்று இல்லை என்பதை நேற்று தெரிவித்தனர். முகாமில், யானைகள் அருகில் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை என்பது உள்பட பல்வேறு கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாம் வளாகத்தில், நிர்வாக அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகைகள், யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, யானைகள் குளிக்க, குளியல் மேடை, ஷவர் மேடைகள் என தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, இம்முகாமை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமில் பங்கேற்க உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 50 பேருக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. யானைகளுக்கான தீவனங்கள் அனைத்தும் வந்து சேர்ந்துவிட்டன. முகாம் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோயில் யானை அபயாம்பிகை முதலாவதாக முகாமுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் சுப்ரமணியர் சுவாமி கோயில் யானை தெய்வானை 2வதாக வந்தது. இரு யானைகளுக்கும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு யானைகள் முகாம் நடக்கும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன.

நேற்று இரவு வரை 21 கோவில் யானைகளும், 3 மடங்களை சேர்ந்த யானைகளும் என மொத்தம் 24 யானைகள் வந்து சேர்ந்தன. முகாமில் தேவைப்படும் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சையும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி பசுந்தீவனம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது.

2 யானைகள் இன்று வருகை : புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் யானை பிருக்குருதி ஆகியவை முகாமிற்கு இன்று வர உள்ளன.

முகாமிற்கு வந்து சேர்ந்த யானைகள் விவரம்

பெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோயில் யானை கோதை, படவேடு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் இணைந்த ராமர் கோயிலை சேர்ந்த லட்சுமி, மயிலாடுதுறை பிரிவு வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் உப்பிலியப்பன் கோயிலை சேர்நத பூமா, மன்னார்குடி  ராஜகோபாலசுவாமி கோயிலை சேர்ந்த செங்கமலம், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் யானை ஆண்டாள் மற்றும் பிரேமி, திருச்சி தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலை சேர்ந்த அகிலா,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் யானை பார்வதி, மதுரை  கள்ளழகர் கோயிலை சேர்ந்த சுந்தரவள்ளி தாயார், பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயிலை சேர்ந்த  கஸ்தூரி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி, காளையார்கோயில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்  யானை சொர்ணவள்ளி,  ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயிலை சேர்ந்த ஜெயமால்யதா,  கோவை பட்டீஸ்வரசுவாமி  கோயில் யானை கல்யாணிசங்கரன்கோயில் சங்கரநாராயணசுவாமி கோயில் யானை கோமதி, நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி,  

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் (ஜீயர்மடம்) யானை குறுங்குடி வள்ளி மற்றும் சுந்தரவள்ளி, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலை சேர்ந்த தெய்வானை,  ஆழ்வார் திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயிலை சேர்ந்த  ஆதிநாயகி,   திருக்கோளூர், வைத்தமாநிதி பெருமாள் கோயிலை சேர்ந்த குமுதவள்ளி,  ஸ்ரீ வைகுண்டம் இரட்டைத் திருப்பதி, அரவிந்தலோச்சனார் கோயிலை சேர்ந்த லட்சுமி, மயிலாடுதுறை (திருவாடுதுறை ஆதினம்) மயூரநாதசுவாமி  கோயில் யானை அபயாம்பிகை,  அழகிய நம்பிராயர் திருக்கோயில் என 24 யானைகள் வந்து சேர்ந்தன.

Tags : Thekkampatti 24 ,welfare camp , Mettupalayam: On behalf of the Department of Hindu Religious Affairs of the Government of Tamil Nadu belonging to the temples and monasteries in Tamil Nadu
× RELATED 41 நாட்கள் நலவாழ்வு முகாம் நாளை...