×

உ.பி-யில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிய மனு..: மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வான்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.

படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்தனர். இந்த விஷயத்தில் போலீசார் தங்களை கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

அதனை தொடர்ந்து பல்ராம்பூர் பகுதியில் 22 வயதான மற்றொரு படியலினப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதேபோல், அம்மாநிலத்தில் 17 வயதுடைய மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்களுக்கு அரசியல் கட்சியினர், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவது அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று தலைமை நீதிபதி பாப்டே அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Tags : UP ,Supreme Court , Petition seeking implementation of President's rule in UP: Supreme Court dismisses petition
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...