×

கோவையில் நடக்கும் புத்துணர்வு முகாமுக்கு படவேடு ராமர் கோயில் யானை அனுப்பி வைப்பு

கண்ணமங்கலம் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடந்த 2003ம் ஆண்டு முதல் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் நடக்கும் இம்முகாம், யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை நீக்கவும், அவை ஓய்வெடுத்து தெம்பு பெறவும், மருத்துவ கவனம் செலுத்தவும் நடத்தப்படும் ஏற்பாடு ஆகும்.

சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாமில் யானை பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளுக்கான ஷவர்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான மருத்துவ பரிசோதனை நிலையம், யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தூரம் நடைபாதை ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டும் கோவை தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது.

இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகள் முகாமுக்கு அழைத்து செல்லப்படுகிறது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு ராமர் கோயில் யானை லட்சுமி நேற்று அதிகாலை 5 மணியளவில் லாரி மூலம் தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். அப்போது, கால்நடை மருத்துவர் பெரியசாமி, கோயில் மேலாளர் மகாதேவன், அலுவலர்கள் சிவக்குமார், சீனிவாசன், மோகன் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.

Tags : Padavedu Ram Temple ,Coimbatore ,refresher camp , Kannamangalam: Coimbatore District, Mettupalayam Circle, Karamadai Panchayat Union Thekkampatti Village, Hindu
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...