இன்று வரை சசிகலா அதிமுக உறுப்பினர் தான்... அவர் காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது : ராஜா செந்தூர்பாண்டியன்

பெங்களூர் : சசிகலா காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று தமிழகம் வருகிறார். பெங்களூருவிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா; அமைச்சர்களின் புகாரால் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலா காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் நடவடிக்கை உறுதி என காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் எச்சரித்துள்ளார். எனினும், காவல்துறையின் கெடுபிடிகளை சட்டரீதியாக சந்திக்கவுள்ளதாக சசிகலாவின் லீகல் டீம் கூறுகிறது.

இதுகுறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது, சசிகலா வரும் வழியில் இதுவரை போலீஸ் கெடுபிடிகள் இல்லை. கட்சி கொடி பிரச்சினை சட்ட விவகாரம். அதை காவல்துறையை வைத்து கையாள முடியாது.காவல்துறை கொடுக்கும் நோட்டீஸை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போகிறோம். அதிமுக கொடியை பயன்படுத்த விடாமல் தடுக்க காவல்துறையை பயன்படுத்துவது ஏன்?. கொடியை அகற்ற வேண்டும் என்று சொல்வது தான் காவல்துறையின் பணியா?. சசிகலா இன்னும் அதிமுக உறுப்பினராக தான் உள்ளார். ஆதலால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது. அவர் காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது. சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, கொடி கட்டக்கூடாது என்று சொல்ல முடியாது. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், என்றார்.

Related Stories:

>