தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா-வுக்கு கொரோனா தொற்று உறுதி: நலமுடன் உள்ளதாக தனது டுவிட்டரில் சூர்யா பதிவு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா-விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக படங்களுக்கான படிப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மும்பை சென்றார். குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவிட்ட சூர்யா, தனது அடுத்த அடுத்த படங்களின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகர் சூர்யா-வுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை-யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,  தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என அவர் பதிவிட்டுள்ளார். 

Related Stories:

>