×

2 மடங்கு வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: எச்சரித்த ஆய்வு முடிவுகள்

புதுடெல்லி: உத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உருகி உடைந்ததில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 125 பேர் மாயமாகி இருக்கும் நிலையில், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே இமயமலையில் பனிப்பாறைகள் உருகும் வேகம் 2 மடங்கு அதிகரித்து விட்டதாக கடந்த 2019ம் ஆண்டு ஆய்வு முடிவு ஒன்று எச்சரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ‘சயின்ஸ் அட்வான்ஸ்’ இதழில் இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது தொடர்பான ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 1970களில் உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகளை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தின.

இந்தப் புகைப்படத்தில் உள்ள இமயமலையின் மேல் பரப்பையும், பின்னர் 2000ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வைர எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்களில் உள்ள இமயமலையின் மேற்பரப்பையும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 1975-2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைக் காட்டிலும், 21ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இமயமலைப் பனிப்பாறைகள் உருகும் அளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் பனிப்பாறைகளின் மொத்த அளவில் கால் பங்கு உருகி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 1975-2000 ஆண்டு வரையிலான வெப்பநிலையை விட 2000-2016ம் ஆண்டு வரையிலான வெப்பநிலை சராசரியாக ஒரு டிகிரி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு வெப்பமயமாதல் அதிகரிப்பதால் சராசரியாக பனிப்பாறைகள் 0.25 மீட்டர் உயரத்தை இழந்து வருகின்றன என அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

80 கோடி பேரை அழித்து விடும்
* நிலக்கரி, எண்ணெய், எரிவாயு இவற்றால் ஏற்படும் புகையே இமயமலையின் பனி உருகல் அதிகரிப்புக்கு காரணம்.
* பல்வேறு வற்றாத ஜீவநதிகளின் தாயகமாக உள்ள இமயமலை நீர்வளம் வற்றினால் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீரையும் வாழ்வாதாரத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
* மக்களுக்கு நேரடியாகப் பயன்படாத துருவப் பனிப்பாறைகள் உருகும் போதே காலநிலை மாற்றங்கள் மக்களை வாட்டுகின்றன.
* மக்களின் மத்தியில் வாழ்வாதாரமாக உள்ள இமயமலையின் நீர்வளமும் வற்றினால் பேரழிவையே தரும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Himalayan , 2 times faster melting Himalayan glaciers: warning study results
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்