×

பனிப்பாறை உருகி உடைந்து பேரழிவு உத்தரகாண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு: 125 தொழிலாளர்கள் மாயம்: 10 சடலங்கள் மீட்பு

டேராடூன்: உத்தரகாண்டில் நந்தா தேவி பனிப்பாறை உருகி உடைந்ததில் தவுலி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த 125க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணவில்லை. இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இமயமலைத் தொடரின் கார்வால் பகுதியில் நாட்டின் 2வது உயரமான நந்தாதேவி சிகரம் அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டம் உள்ளது.

நேற்று காலை 10.30 மணி அளவில் நந்தாதேவி சிகரத்தின் ஒருபகுதியில் பனிப்பாறை உருகி உடைந்தது. இதனால், கங்கை ஆற்றின் துணை ஆறுகளான தவுலி கங்கா, அலக்நந்தா ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறுகலான பள்ளத் தாக்கு பகுதியில் ஓடும் தவுலி ஆற்றில், சுனாமி அலையைப் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள், சாலைகளை வெள்ளம் சூறையாடியது. ஜோஷிமாத் நகரையும் மலாரியா பகுதியையும் இணைக்கும் பாலம், தபோவன் அணை அருகே சுரங்கம் அமைக்கும் பகுதி, ரிஷிகங்கா நீர்மின் திட்ட கட்டமைப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கரையோரத்தில் இருந்த பல வீடுகளையும் வெள்ளம் இழுத்துச் சென்றது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் சுரங்கப் பணியிலும், நீர்மின் திட்டப் பணியிலும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, ரிஷிகங்கா நீர்மின் திட்டப் பணியில் 125 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.இப்பேரழிவு குறித்த தகவலை அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உறுதிப்படுத்திய நிலையில், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்திய-திபெத் பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டனர்.

டெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து 5 குழு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர். இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் சுரங்கப் பகுதி, நீர் மின் திட்டப் பகுதிகளில் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், சுரங்கத்தில் சிக்கியிருந்த 16 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். நீ்ர்மின் திட்டப் பகுதியிலிருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 125 தொழிலாளர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரிஷிகங்கா அருகே உள்ள ரெனி கிராமத்தில் பாலங்கள் உடைந்திருப்பதால் பல கிராமப் பகுதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. கங்கை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மாநில முதல்வர் ராவத் நேற்று தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ராவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தனர்.

* சாதனை வெள்ளம்
தவுலி கங்கை நதியில் ஜோஷிவாத் பகுதியில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் நீர்மட்டம், இதுவரை இல்லாத வகையில் அதிக உயரமாக இருந்துள்ளது. கடந்த 2013ல் கேதார்நாத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் உருவான வெள்ளப்பெருக்கின் போது இந்த இடத்தின் நீர்மட்டம் 1,385.54 மீட்டராக இருந்தது (கடல் மட்டத்தில் இருந்து), ஆனால், நேற்று காலை 11 மணியளவில் இங்கு 1,388 மீட்டர் நீர்மட்டம் பதிவானது. மாலை 6 மணியளவில் வெள்ளம் குறைந்து, வழக்கமான நீர்மட்டத்துக்கு வந்தது.

* ஆழ்ந்த கவலை தருகிறது
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்டுள்ள சேதம், ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பொதுமக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திக்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் சிறப்பாக நடக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளேன்,’ என குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் கண்ட பேரழிவுகள்
* 1991ல் உத்தரகாசி நிலநடுக்கம்: 6.8 ரிக்டர் புள்ளி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 768 பேர் உயிரிழந்தனர்.
* 1998ல் மால்பா நிலச்சரிவு: கைலாஷ் மானசரோவர் யாத்திரீகர்கள் 55 பேர் உட்பட 255 பேர் பலியானார்கள். நிலச்சரிவினால் ஏற்பட்ட மண் குவியல் சாரதா ஆற்றின் ஒரு பகுதியை தடுத்தது.
* 1999ல் சமோலி நிலநடுக்கம்: 6.8 ரிக்டர் புள்ளி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100 பேர் உயிரிழந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது.
* 2013ல் பெரும் வெள்ளம் : உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு பெரும் சேதத்தை விளைவித்தது. 5,700 பேர் உயிரிழந்தனர். பாலங்களும், சாலைகளும் உடைந்தன. 3 லட்சம் மக்கள் பள்ளத்தாக்கில் ஆங்காங்கே சிக்கி தவித்தனர்.

* திடீரென உருகி உடைந்தது ஏன்?
உத்தரகாண்ட் மாநீில முதல்வர் திரிவேந்திர ராவத் கூறுகையில், “கங்கை ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பழைய வெள்ளப்பெருக்கு புகைப்படங்களை கொண்டு வதந்திகளை பரப்ப வேண்டாம். திடீரென பனிப்பாறை உருகியதற்கான காரணங்களை நிபுணர்கள் விரைவில் ஆய்வு செய்வார்கள்,” என்றார்.

* பிரதமர் மோடி அதிர்ச்சி
அசாம், மேற்கு வங்கத்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள துரதிருஷ்டவசமான சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த மாநிலத்துக்கு நாடு ஆதரவாக இருக்கும். அங்குள்ள ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் தேசம் பிரார்த்தனை செய்யும். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்,’ என கூறியுள்ளார்.

* ரூ.6 லட்சம் நிவாரணம்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இதே போல, பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

* அபாயம் இல்லை
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு ஆபத்து இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து சில மணி நேரத்தில் ஆற்றில் தண்ணீரின் அளவு வழக்கமான நிலைக்கு வந்து விட்டதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் 2வது உயரமான நந்தா தேவி பனிச் சிகரம்
* நாட்டில் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்காவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது நந்தா தேவி சிகரம்.
* இது கர்வால் இமயமலையின் ஒரு பகுதியாகும்.
* நந்தா தேவி வடக்கு மற்றும் நந்தா தேவி தெற்கு பனிப்பாறைகள் 19கி.மீ. நீளம் கொண்டவை. கடல் மட்டத்தில் இருந்து 7,108 மீட்டர் உயரத்தில்  மலை உச்சியில் அமைந்துள்ளது.

Tags : floods ,bodies ,Uttarakhand , Glacier melts, catastrophic floods in Uttarakhand: 125 workers rescued: 10 bodies recovered
× RELATED உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட...