டொமினிக் பெஸ் அபார பந்துவீச்சு ‘பாலோ ஆன்’ தவிர்க்குமா இந்தியா?

சென்னை: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், பாலோ ஆன் நெருக்கடியை தவிர்க்க இந்திய அணி போராடுகிறது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரூட் 218, சிப்லி 87, ஸ்டோக்ஸ் 82 ரன் விளாசினர். 2ம் நாளான நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லீச் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் 6 ரன், கில் 29 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் வெளியேறினர்.

கேப்டன் கோஹ்லி 11 ரன், துணை கேப்டன் ரகானே 1 ரன் எடுத்து பெஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, இந்தியா 73 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்நிலையில், பொறுப்புடன் விளையாடிய புஜாரா - பன்ட் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்தது. புஜாரா 73 ரன்னில் (143 பந்து, 11 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய பன்ட் 91 ரன் எடுத்து (88 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) பெஸ் பந்துவீச்சில் லீச் வசம் பிடிபட்டார். 3ம் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன் எடுத்துள்ளது. வாஷிங்டன் 33 ரன், அஷ்வின் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பாலோ ஆன் நெருக்கடியை தவிர்க்குமா இந்தியா என்ற கேள்வியுடன் இன்று பரபரப்பான 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

* டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிப். 13ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன் லைனில் நாளை தொடங்கும் என டிஎன்சிஏ அறிவித்துள்ளது. 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி (15,000 இருக்கைகள்). 2012க்கு பிறகு ஐ, ஜே, கே கேலரிகளில் பார்வையாளர்கள் அமர உள்ளனர்.

Related Stories:

>