×

மணிவாசகம் உடல் தகனத்தின் போது பழிதீர்ப்பதாக கோஷம் ஓராண்டு தலைமறைவாக இருந்த 3 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் கைது: சேலம் போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கணவாய்புதூர் கிராமம் ராமமூர்த்திநகரை சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்டான இவர், கேரள வனப்பகுதியில் தனது கூட்டாளிகளுடன் சுற்றித்திரிந்தார். கடந்த 2019 அக்டோபர் 28ம் தேதி, கேரளாவில் நடந்த துப்பாக்கி சண்டையில், மணிவாசகம் உள்பட 4 மாவோயிஸ்ட்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சேலம் ராமமூர்த்திநகர் சுடுகாட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த அவரின் ஆதரவாளர்களும், அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தினரும், ஆயுதம் ஏந்துவோம், ரத்த கடனை ரத்தத்தால் பழி தீர்ப்போம் என கோஷமிட்டனர். இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன் மற்றும் மதுரையை சேர்ந்த விவேக், காடையாம்பட்டி சுதாகர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவான 5க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.

தலைமறைவானவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடினர். இதில் தொடர்புடைய மாவோயிஸ்ட் ஆதரவாளர்களான சேலம் மின்னாம்பள்ளி ராஜராஜேஸ்வரிநகர் செல்வராஜ்(55), ஓமலூர் ஆணைகவுண்டம்பட்டி பாலன்(41), சேலம் செல்வநகர் சீனிவாசன்(66) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான செல்வராஜ், சிபிஐ (எம்எல்) முன்னாள் மாவட்ட செயலாளர். அதேபோல் பாலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளராகவும், சீனிவாசன், அதே இயக்கத்தில் மாவட்ட தலைவராகவும் உள்ளனர். இந்த 3 பேரும்,2019 நவம்பர் மாதத்தில் இருந்து ஓராண்டிற்கு மேலாக தலைமறைவாக இருந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : Salem ,police arrest ,supporters ,Maoist , Salem police arrest 3 Maoist supporters who went into hiding for a year
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை