×

கொலை மிரட்டலால் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் தற்கொலை அதிமுக எம்பி மருமகனை காப்பாற்ற போலீஸ் முயற்சி: மகனை பறிகொடுத்த தந்தை குற்றச்சாட்டு

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே அதிமுக எம்பி வைத்திலிங்கத்தின் மருமகன் விடுத்த கொலை மிரட்டலுக்கு பயந்து ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் எம்.பியின் மருமகனை காப்பாற்ற போலீசார் முயற்சி செய்வதாக தற்கொலை செய்தவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன் வினோத்குமார் (32). தஞ்சையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் கார்த்தி. டாக்டரான இவர், அதிமுக எம்பி வைத்திலிங்கத்தின் மருமகன்.

இந்நிலையில் கோவிந்தராஜனுக்கும், குணசேகரனுக்கும் இடப்பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 5ம்தேதி கார்த்தி, வினோத்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்தி, வினோத்குமார் மற்றும் கோவிந்தராஜனையும் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் வினோத்குமார் தனது வீட்டில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசாரிடம், குணசேகரன் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு வினோத்குமார் தற்கொலை செய்துள்ளார்.

இதற்கு காரணமான குணசேகரன், அவரது மகன் டாக்டர் கார்த்தி, இன்னொரு மகன் வசந்த், குணசேகரனின் தம்பி டாக்டர் மணி மற்றும் சங்கர், ஆனந்த் ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று குடும்பத்தினர் கூறினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வினோத்குமார் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உறவினர்கள், வினோத்குமார், அவரது தந்தையை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்.

இல்லையென்றால் சாலைமறியல் செய்வோம் என்று கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் தாக்கியவர்களில் ஒருவரை கைது செய்து விட்டோம் என்று கூறினர். இதையடுத்து இரவே உடலை பெற்றுச்சென்றனர். அதனைத் தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட நபரை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இது ஒன்றும் பெரிய சம்பவம் கிடையாது. இதனை பெரிது படுத்த வேண்டாம். இதில் ஏதாவது பிரச்னை என்று வந்தால் சிக்கலாகி விடும் என்று கூறினர். ஒருவரை கைது செய்தது குறித்து கேட்டதற்கு, போலீசார் அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று கூறினர்.

இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை கோவிந்தராஜ் கூறுகையில், என் மகனை ரோட்டில் வைத்து வேட்டியை அவிழ்த்து அவமானப்படுத்தினர். கடந்த 5ம்தேதி தகராறு நடந்தபோது என்னையும், என் மகன் வினோத்குமாரையும் போலீசார் கண்முன்னே தாக்கினார்கள். எல்லாவிஷயமும் தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அதிமுக எம்பி வைத்திலிங்கத்தின் மருமகன் என்ற காரணத்தினால் போலீசார் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று சொன்னபிறகு வைத்திலிங்கத்தின் மருமகன் கார்த்தியின் உறவினர் சங்கர் என்பவரை கண்துடைப்புக்காக அழைத்து வந்து காவல்நிலையத்தில் வைத்து விட்டு பின்னர் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த வழக்கில் இருந்து எம்பியின் மருமகனை காப்பாற்ற போலீசார் முயற்சி செய்கின்றனர். வைத்திலிங்கத்தின் பேச்சை நம்பி எங்களை காவல்துறையினர் ஏமாற்றி விட்டனர். காவல்துறையில் நீதி கிடைக்காது என்பதால் என் மகனை பறிகொடுத்து நிர்க்கதியாக நிற்கிறோம். வைத்திலிங்கம் சம்பந்தி குடும்பத்தினால் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உயிர்பயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் என்றார். ‘வைத்திலிங்கம் சம்பந்தி குடும்பத்தினால் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உயிர்பயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியவில்லை’.

Tags : Hardware MP shoplifter ,suicide , Hardware MP shoplifter commits suicide by threatening to kill police
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை