×

கார்ப்ரேட்டுகளுக்கு உதவும் மக்கள் விரோத பட்ஜெட் இது: திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் விற்கப்போவதாக நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புச் செய்துள்ளார். பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் மக்கள் விரோத பட்ஜெட் இது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண்துறை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூடுதல் வரி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மீது தாங்கமுடியாத அளவுக்கு வரிச்சுமையை ஏற்றுகிறது. நாட்டை விலைபேசி விற்பதாகவும், மக்களின் மீது வரிச்சுமையைக் கூட்டுவதாகவும் உள்ள இந்த பட்ஜெட் உள்ளது.  

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் யூரியா மீது கூடுதல் வரியை விதித்து மேலும் அவர்களை வாட்டிவதைக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. அதுமட்டுமின்றி மின்விநியோகத்தைத் தனியாரிடம் கொடுப்பதென்ற முடிவு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கான தொடக்கமே தான். இதேபோல், எல்.ஐ.சியின் பங்குகளை விற்கப் போவதாகக் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

எஸ்சி மாணவர்களுக்கு ‘போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தைக் கைவிட பாஜக அரசு முடிவுசெய்தபோது அதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடியது. அதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜ அரசு ஆரவாரத்தோடு அறிவித்திருக்கும் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஜிடிபியில் 6 சதவீதம் ஒதுக்கப்படும் என கூறியிருந்தனர். ஆனால், அதில் பாதியளவுகூட இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உயர்கல்வி முழுவதையும் மத்திய அரசின் கையில் எடுத்துக்கொள்வதற்கான அறிவிப்பே இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 24 கோடி பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட்டிலும் ஒதுக்கி வைத்துவிட்டனர். கொரோனா பெருந்தொற்றினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலன் பயக்கும் வகையிலான அறிவிப்பு ஏதும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இதேபோல், மாத சம்பளம் பெறுவோர் வருமான வரியில் சலுகை வழங்கப்படும் என ஆவலோடு காத்திருந்தனர். அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது.

பாஜ அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின்மீது 35 சதவீதம் கூடுதல் வரியும், கொண்டைக்கடலை மீது 50 சதவீதம் கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து ஏழை, எளிய மக்கள் மேலும் அவதிக்குள்ளாகும் நிலையே ஏற்படும். பட்ஜெட்டில் 3 சதவீதம் பற்றாக்குறை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால் இந்த பட்ஜெட்டில் 9.5 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 லட்சம் கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அந்த பற்றாக்குறையை சமாளிக்கவே நாட்டின் சொத்துகளை விற்கவும், மக்கள்மீது ‘கூடுதல் வரி’ விதிக்கவும் இந்த அரசு முடிவுசெய்துள்ளது. இந்த பட்ஜெட்டின் மூலம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்குமே தவிர குறையாது. வழக்கம்போல மத்திய அரசு மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 24 கோடி பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட்டிலும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

* ஏழைகளுக்கு எதிரான நிதிநிலை அறிக்கை:  முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பட்ஜெட் நாட்டு நலனை பற்றியும் மக்களை பற்றியும் கவலைப்படாமல் கார்ப்ரேட்டுகளை காக்கக்கூடிய பட்ஜெட்டாக  உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு விலை உயர்வை அறிவித்துவிட்டு இது மக்களை பாதிக்காது என்று நிதி அமைச்சர் குறிப்பிடுகிறார். அதேபோன்று, பொதுத்துறை நிறுவங்களை ஜவஹர்லால் நேரு உருவாக்கும் போது இந்தியா சொந்த காலில் நிற்க வேண்டும் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

ஆனால், இன்றைய அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை பற்றி கவலைப்படாமல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த நிதி நிலை அறிக்கையில் ஆயுள் காப்பீட்டு கழகம் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இதேபோல், விமானநிலைய தளங்கள் தனியாருக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். பொதுமக்களுடைய சொத்தான பொதுத்துறைகளை விற்பனை செய்வது நீடிக்கும் என நிதிஆயோக் கமிட்டி தலைவர் அறிவித்துள்ளார். இதற்கு, வங்கிகள் மூலமாக பெருநிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் திரும்ப வரவில்லை என்பது தான் அவர்களின் பதிலாக உள்ளது.
 
வராக்கடன் பட்டியலில் உள்ளவற்றை பறிமுதல் செய்வதற்கு மாறாக பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று அதை சரிசெய்கிறோம் என்று கூறுவது அபத்தத்திலும் அபத்தம். பாதுகாப்புதுறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் தனியாருக்கு விற்பது என்பது ஏற்புடையது அல்ல. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. குறிப்பாக, கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள், சிறு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்டார்கள்.

இவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அனைத்துகட்சிகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தான் செயல்பட்டன. மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்ரேட் நிறுவனங்களை காப்பாற்றுகிற பட்ஜெட்டாகவும், ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்டாகவும் உள்ளது. சிலிண்டர் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவலைப்படவில்லை.

இதேபோல், தமிழகத்திற்கு சட்டப்படி வழங்கவேண்டிய  ஜிஎஸ்டி வருமானம், கொரோனா நிவாரணம், தேசிய பேரிடர் நிதி, மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான நிதி ஆகியவையே இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. மருத்துவம், கல்வி தனியாரின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிரொலிக்கும் பட்ஜெட்டாக தான் இந்த பட்ஜெட் அறிவிப்பு உள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள், சிறு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தான் செயல்பட்டன

Tags : corporates ,Thirumavalavan ,party leader ,Liberation Tigers of Tamil Nadu , This is the anti-people budget that helps corporates: Thirumavalavan, Liberation Tigers of Tamil Nadu party leader
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்