×

சசிகலா சென்னை வருகையையொட்டி ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: பெங்களூரில் இருந்து சசிகலா இன்று சென்னை வருகிறார். இதனால் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து இன்று சென்னை வருகிறார். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆயிரம் கார்கள் அணிவகுப்புடன் மிக பெரிய அளவில் வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழக எல்லையில் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பு ஜெயலலிதா சமாதியில் 3 மூன்று முறை அடித்து சபதம் எற்றுக்கொண்டார். அதன் பிறகு தான் அவர் பெங்களூரு சிறைக்கு சென்றார். இப்போதும் அவர் பெங்களூரில் இருந்து நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆனால் கட்டுமான பணி என காரணம் காட்டி ஜெயலலிதா நினைவிடத்தை அரசு தற்போது மூடியுள்ளது.

சசிகலா பெங்களூரில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார் என்று உளவுத்துறை போலீசார் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து நேற்று காலை முதல் சென்னை அண்ணாசதுக்கத்தில் உள்ள ஜெயலலிதா நினைவிடம், ராயப்பேட்டை அவ்வைசண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கு உதவி கமிஷனர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் யார் சென்றாலும், அவர்களை போலீசார் வழிமறித்து தீவிர விசாரணைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். அதேபோல், ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமான பணியாட்களை தவிர மற்ற யாரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை.

Tags : headquarters ,memorial ,Jayalalithaa ,AIADMK ,Sasikala ,Chennai ,visit , Sasikala, Jayalalithaa Memorial, Police, Security
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...