விமானப்படை வீரர் கொலை: தனிப்படை போலீசார் சென்னை வந்தனர்: தீவிர விசாரணையில் முக்கிய தகவல்கள்

சென்னை: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சூராஜ்குமார் துபே (26). இவர், கோவை, இந்திய கடற்படையில் பணியாற்றினார். இவர், ஜனவரி மாதம் 30ம் தேதி இரவு 9.30 மணிக்கு ராஞ்சியிலிருந்து ஐதராபாத் வழியாக சென்னைக்கு இண்டிகோ ஏர்லைனஸ் விமானத்தில் வந்துள்ளார். அதன்பின்பு அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இவர் கடந்த 5ம் தேதி இரவு மகாராஷ்டிரா மாநிலம், பால்கார் அருகே வேவாஜி வனப்பகுதியில் தீவைத்து எரிந்த நிலையில் அலறிக்கொண்டு ஓடி வந்துள்ளார். அவரை மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நேற்று முன் தினம் இறந்துள்ளார்.

சுராஜ்குமார் துபே, இறப்பதற்கு முன்னதாக மகாராஷ்டிரா போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை சென்னை விமான நிலையம் அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கிமுனையில் கடத்தி வந்து இங்குள்ள வனப்பகுதியில் ஒரு அறையில் 3 நாட்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். அதோடு எங்கள் குடும்பத்தினரிடம் ₹10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்காமல் அவர்கள் போலீசில் புகார் செய்ததால், ஆத்திரத்தில் என்னை தீவைத்து கொளுத்திவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மகாராஷ்டிரா போலீஸ் சென்னை விமான நிலைய போலீஸ் உதவியை நாடியுள்ளது. விமான நிலைய போலீசார், விமான நிலையத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 30ம் தேதி இரவு 9.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ராஞ்சியிலிருந்து ஐதராபாத் வழியாக சுராஜ்குமார் தபே சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்துள்ளார். அதன்பின்பு அவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். மெட்ரோ ரயில் சேவை இரவில் இல்லை என்பதால் மீண்டும் வந்து திரிசூலம் ரயில்வே சப்வேக்குள் செல்வதுவரை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திரிசூலம் ரயில்நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், அதற்கு மேலாக எந்த பதிவும் இல்லை. ஆனால் இவர் செல்லும்போது தனியாகவே செல்கிறார். எனவே விமான நிலையத்திலிருந்து யாரும் பின்தொடர்ந்ததாக தெரியவில்லை. இந்த விவரங்கள் மகாராஷ்டிரா போலீசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி முழுமையாக விசாரிக்க மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார்,  நேற்று மதியம் ஒரு மணிக்கு சென்னை வந்தனர்.  அதில் ஒரு எஸ். ஐ., ஏட்டு, ஒரு காவலர் என 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் மீண்டும் திரிசூலம் பகுதியில் பதிவான கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கடத்தல் ஆசாமிகள் சூரஜ்குமார் துபேயை வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக கோயம்பேடுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கோயம்பேடில் ஒரு ஏடிஎம்மில் சூரஜ்குமார் துபேயின் அக்கவுண்டில் இருந்து ₹15 ஆயிரம் எடுத்தனர். பின்னர் கோயம்பேடு வழியாக சூரஜ்குமாரை கடத்தி சென்றது தெரியவந்தது.

Related Stories:

>