×

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியம், அறிவுசார் பூங்கா பிப்.24ல் திறப்பு: பொதுமக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியம், அறிவுசார் பூங்கா பிப்.24ல் திறக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் 79.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த மாதம் 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். அன்றே ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்தை பார்வையிட்டு வந்தனர். இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து கடந்த 2ம் தேதி முதல் ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக 8 டிஜிட்டல் வீடியோ காட்சிகளை காணலாம். ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதில், பல்வேறு திட்டங்கள் தொடர்பாக 2டி அனிமேஷன் வீடியோக்கள் இடம் பெறுகின்றன. ஜெயலலிதாவின் பள்ளிப்பருவம் முதல் சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை சம்பவங்களும் டிஜிட்டல் திறையில் இடம் பெறுகின்றன. மேலும்,  பார்வையாளர்கள் தொடு திரையின் மூலம் ஜெயலலிதாவுடன் பேசலாம். இதற்காக, ஹாலோ கிராம் வீடியோ தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜெயலலிதாவிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர்கள் பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 100 பேர் அமரும் வசதியுடன் கூடிய ஆடிட்டோரியம் அமைக்கப்படுகிறது. மேலும், ஜெயலலிதாவின் சிலிக்கான் சிலைகள் வைக்கப்படுகிறது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடன் ஜெயலலிதா சிலையுடன் செல்பி எடுக்கலாம். இந்த பணிகளை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று திறக்கப்படுகிறது. அன்றயை தினம் முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


Tags : Museum ,Jayalalithaa Memorial, Intellectual Park ,viewing , Jayalalithaa, Memorial, Public, Permission
× RELATED ஸ்ரீவாரி அருங்காட்சியகம்