×

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை: உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 ெசாத்துக்கள் அரசுடைமையாக்கம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு ₹100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி குமாரசாமி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அதன்பிறகு, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 5.12.2016ல் ஜெயலலிதா உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் 14.2.2017ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்  அடைக்கப்பட்டனர்.

இதில் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்தது. சசிகலா, இளவரசி ஆகியோரின் அபராத தொகையை அவரது உறவினர்கள் செலுத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். இளவரசி கடந்த 5ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். சுதாகரன் ₹10 கோடி அபராத தொகையை கட்டாததால் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் பெங்களூரில் இருந்து சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். அவர்களை வரவேற்க அமமுக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சசிகலா சென்னை வந்தால் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்வார் என்பதால், திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் பராமரிப்பு என்று கூறி அண்மையில் மூடப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி இளவரசி, சுதாகரனின் சொத்துக்களை நேற்று முடக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் சீத்தாலெட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட சொத்துக்கள் அரசிற்கு உரிமை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோருக்கு சொந்தமான சென்னை வாலஸ்தோட்டத்தில் 1வது தெரு, புதிய கதவு எண்.1ல் உள்ள 61/1, 62, 66/2 ஆகிய சர்வே எண்களில், மனை எண்கள் 17, 17ஏ, மற்றும் 18க்கு உட்பட்ட 6 கிரவுண்டு, 1087 சதுரஅடியில் பிரிக்கப்படாத சொத்தில் 581 சதுர அடியில் ஆவண எண் 370/94, 371/94, 372/94, 373/94 ஆகிய ஆவண எண் ெகாண்ட சொத்துக்கள் மற்றும் சென்னை வாலஸ் தோட்டத்தில் 1வது தெருவில் உள்ள கதவு எண்.1ல் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் ஆகிய 5 சொத்துக்கள் மற்றும் சென்னை ராம் நகர் கதவு எண்.149 கொண்ட டிடிகே சாலையில் சர்வே எண்.3705க்கு உட்பட்ட 2 கிரவுண்ட், 1237 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டுள்ள தரைத்தளம் (2150 ச.அடி) மற்றும் முதல் தளம் (2150 ச.அடி) கொண்ட வீடு ஆகிய சொத்துக்கள் தமிழக அரசின் சொத்து என உரிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில், மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சொத்துக்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் (வாடகை, நிலுவை வாடகை உட்பட) அனைத்தும் தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government ,Tamil Nadu Government Action Notice , Princess, Sudhakaran, Property, Government, Government of Tamil Nadu
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...