×

கடந்தாண்டைவிட நடப்பாண்டு மரவள்ளி விளைச்சல் 20 சதவீதம் அதிகரிப்பு: விவசாயிகள் தகவல்

சேலம்: தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்வதால், மரவள்ளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்தாண்டைவிட நடப்பாண்டு மரவள்ளிக்கிழங்கு நல்ல விளைச்சல் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சேலம் குரும்பப்பட்டியை சேர்ந்த மரவள்ளிக்கிழங்கு விவசாயி லட்சுமணன் கூறியதாவது: தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுறது.  

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடக்கும். இது பத்து மாத பயிராகும். பொதுவாக மரவள்ளிக்கிழங்குக்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. ஒன்றரை வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் கட்டினால் போதும். ஒரு ஏக்கருக்கு 30 டன் முதல் 40 டன் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் கிடைக்கும். இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு ஆண்டு பெய்த பருவம் தவறிய மழையால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள நிலத்தில் மழைநீர் தேங்க தொடங்கியது. மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் தண்ணீர் தேங்கினால் கிழங்கு நாளடைவில் அழுகிவிடும். இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்து வருகின்றனறர். ஆனால் நடப்பாண்டு மரவள்ளிக்கிழங்கு நல்ல விளைச்சலை தந்துள்ளது.

இதன் காரணமாக கடந்தாண்டைவிட நடப்பாண்டு 20 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டாக மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைப்பதில்லை. சேகோ ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு 15 ஆயிரத்திற்கு விற்பனையானதால் தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் சில ஆண்டாக ஒரு டன் 7000  முதல் 8000க்கு தான் விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அதிகம் வரும் நேரத்தில் விலை சரிகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும். இவ்வாறு லட்சுமணன் கூறினார்.

Tags : 20% increase in cassava yield over last year: Farmers Information
× RELATED தோல்வி பயம் வந்துவிட்டதால்தான்...