×

அதிமுக மீண்டும் போட்டியிடுமா? தூத்துக்குடி தொகுதிக்கு முட்டல், மோதல்: உட்கட்சி பூசலால் குஸ்தி: வரிந்து கட்டும் கரைவேட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி  சட்டமன்றத் தொகுதியை பெறுவதற்கு அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது.  உட்கட்சி பூசல் காரணமாக ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.  கூட்டணி கட்சியினரும் தூத்துக்குடி தொகுதியை பெறுவதற்கு காய்  நகர்த்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம்  முடிகிறது. எனவே விரைவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதிசெய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  தூத்துக்குடி, மாவட்ட தலைநகராகும். இந்தத் தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கீதாஜீவன் அப்போதைய திமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 2011ல் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற சி.த.செல்லப்பாண்டியன் அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இதனால் தூத்துக்குடி, விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். தொகுதியில் வெற்றி பெறுபவர் கட்சி, தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் யோகம் உள்ளது. இதனால் இந்தத் தொகுதியை பெறுவதற்கு தற்போது ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது.

அதிமுகவை  பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர்  கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ  ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி, தெற்கு மாவட்டத்திற்குள் வருவதால் மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் எஸ்.பி.சண்முகநாதன் பரிந்துரைக்கும் நபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனினும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தொகுதியை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர்  ஏற்கனவே 2011-16 வரை எம்எல்ஏவாகவும், அந்த காலக்கட்டத்தில் 3  ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில்  மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இவருக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட  செயலாளரின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் நேரடியாக தலைமையிடம்  முயற்சித்து வருகிறார்.  

அதேவேளை மாவட்ட செயலாளர்  சண்முகநாதன் ஆதரவாளர்களாக கருதப்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி  தலைவர் சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, முன்னாள் வாரியத்  தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முள்ளக்காடு  செல்வக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண் ஜெபக்குமார்  ஆகியோரும், வடக்கு மாவட்ட பொருளாளராக உள்ள ஆரோன் மோசஸ், முன்னாள் எம்எல்ஏ  வி.பி.ஆர்.ரமேஷ், முன்னாள் எம்பி நட்டர்ஜி, வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி,  ரவீந்திரன், டாக்டர் ராஜசேகர் உள்ளிட்டோரும் தொகுதியை பெறுவதற்கு முயற்சி  செய்து வருகின்றனர். ஆனால் தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது  குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்  சி.த.செல்லப்பாண்டியனுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் மாவட்ட செயலாளர்  உள்ளிட்டவர்களின் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது  தவிர தற்போது அதிமுகவில் இரட்டை தலைமை(இபிஎஸ், ஓபிஎஸ்) இருப்பதால் யாரைப்  பார்த்து சீட் பெறுவது, இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களில் யாருக்கு சீட்  கிடைக்கும் என்பதிலும் குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணி கட்சிகளும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை  பெறுவதற்கு காய் நகர்த்தி வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலின் போது  தூத்துக்குடி தொகுதியை பாஜ பெற்றது. அப்போது மாநில தலைவராக இருந்த  தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போதும் அதிமுக  கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியையும் கேட்டு  வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு பாஜவிற்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள்  மேயரும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா போட்டியிட வாய்ப்பு  கேட்கிறார். தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், பொதுச்செயலாளர் பிரபு,  வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,  தொழிலதிபர் பொன்குமரன் உள்ளிட்டோரும் தொகுதியை பெறுவதற்கான முயற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர். மாநில பொதுச்செயலாளராக உள்ள கரு.நாகராஜனும்  போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. தமாகா தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக இருக்கும்  எஸ்.டி.ஆர். விஜயசீலனுக்காக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தொகுதியை கேட்டு  வருவதாக கூறப்படுகிறது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்  அல்லது மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் ஆகியோரில் ஒருவருக்கு தொகுதியை  பெறுவதற்கான முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால் தூத்துக்குடி தொகுதியை பெறுவதில் அதிமுகவினரிடம், கூட்டணி  கட்சியினரிடமும் கடும் போட்டி உருவாகியுள்ளது.

Tags : AIADMK ,constituency clash ,Thoothukudi , AIADMK, will it contest ?, Thoothukudi constituency
× RELATED தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க...