×

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலில் சீட்டு கேட்டு அதிமுகவில் குடுமிபிடி சண்டை

* சிட்டிங், மாஜி எம்எல்ஏக்களுக்குள் கடும் போட்டி
* எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என பாஜக உறுதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, விராலிமலை, ஆலங்குடி, கந்தவர்கோட்டை(தனி) என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி 3 தொகுதிகள் திமுக வசமும், விராலிமலை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி என 3 தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிடும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சென்னையில் நடந்த அரசு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அறிவித்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜகவினர், இந்த முறை எப்படியாவது எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என இப்போதில் இருந்தே முனைப்பு காட்டி வருகின்றனர். இதே போல் அனைத்து தொகுதிகளிலும் இந்த முறை எப்டியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்று அதிமுகவினரும் காய்நகர்த்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தற்போதைய சிட்டிங் அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதி, முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, கட்டுமாவடி கருப்பையா ஆகியோர் ரகசியமாக தங்களுக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர். சிட்டிங் எம்எல்ஏ ரெத்தினசபாபதி அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு டிடிவி தினகரன் பக்கம் சென்றவர். அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் போட்டு டிடிவி தினகரனை மேடையில் வைத்துக்கொண்டு இபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையான விமர்சனம் செய்தார். இதனால் இவருக்கு சீட் கொடுக்க கூடாது என்று பெரியசாமி தரப்பும், கருப்பையா தரப்பும் தலைமைக்கு புகார் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம், ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவர் பின்னால் சென்றவர். இதனால் இவருக்கு சீட் கொடுக்ககூடாது என்று முதல்வர் தரப்பிற்கு புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சீட் பெற்றுவிட வேண்டும் என தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். அனால் இவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று கட்சியினருக்குள் பேசி வருகின்றனர். பெரியசாமியா, கருப்பையாவா என இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என்று கருத்தும் கட்சியினர் மத்தியில் ரகசிய பேச்சு எழுந்துள்ளது. இதில் பெரியசாமி, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தர்வகோட்டை தொகுதியில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம், தற்போதைய மாவட்ட சேர்மன் ஜெயலெட்சுமி, ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் போட்டியில் இருந்து வருகின்றனர். நார்த்தாமலை ஆறுமுகம் டிடிவி பக்கம் போகாமல் எடப்பாடி பக்கம் இருந்தவர் என்பது கூடுதல் பலமாக அவர் நினைத்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இதனையே வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. அவர் நின்றால் வெற்றி வாய்ப்பு இருக்காது என்று அதிமுக தரப்பினரே பேசி வருகின்றனர். இதனால் ஜெயலெட்சுமிக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினரே அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபாரிசு செய்ததாகவும் இதனால் நார்த்தாமலை ஆறுமுகம் கட்சியினர் மீது வருத்தத்தில் உள்ளார் என்று தகவல். இதில் ஆசிரியர் மாரிமுத்து தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வைரமுத்துவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அவர் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளரக உள்ள கந்தர்வகோட்டையில் சீட் கேட்டால் எப்படி அவர் ஒத்துக்கொள்வார் என்று கட்சியினரே கேள்வி கேட்கின்றனர். ஜெயலெட்சுமி, அமைச்சர் விஜயபாஸ்கர் எதை சொன்னாலும் தட்டாமல் செய்பவர். அதனால்தான் அவரை மாவட்ட சேர்மனாக்கினார். இதனால் இந்த முறை அவருக்குத்தான் சீட் என்று அதிமுகவினர் ஒரு சிலர் பேசி வருகின்றனர்.

கந்தவர்கோட்டை முன்னாள் அதிமுக அமைச்சர் சுப்பிரமணியன் இந்த முறை கந்தர்வகோட்டையில் சீட்டு கேட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் தர்மயுத்தம் நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றவர். கடந்த 5ஆண்டுகளில் மாவட்டத்தில் எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாதவர். தற்போது விஜயபாஸ்கரை சந்தித்துவருவதாகவும் தகவல் வெளியாகிறது. ஆனால் இவருக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அப்போதில் இருந்தே ஒத்துபோகாது என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கந்தர்வகோட்டையில் சீட் கேட்டு வருகிறது. பாஜக மாநில துணைத் தலைவர் புரட்சி கவிதாசன், பாஜக மாநில தலைவர் முருகனுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் தொகுதியை பாஜகவிற்கு பெற்று தந்து தன்னையே வேட்பாளராகவும் அறிவித்துவிடுவார் என்று நினைத்துக்கொண்டு உள்ளார். புரட்சி கவிதாசன் மறைமுகமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. புரட்சி கவிதாசனுக்கு சீட் கொடுத்தால் அதிமுகவினரே தேர்தல் பணி செய்யமாட்டார்கள் என்று அதிமுகவினரே வெளிப்படையாக பேசிவருகின்றனர்.

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துவரும் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த முறையும் அவர்தான் போட்டியிடுவார் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவர் அமைச்சராக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை நல்ல வளர்ச்சியடைந்துள்ளதாக அதிமுகவினருக்குள் பேசிவருவதால் தேர்தல் பணியில் இப்போதில் இருந்தே நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் ஆதரிப்பார்களா? என்று பொருத்துதான் பார்க்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துவார் என்ற தகவல் அதிமுகவினரிடம் சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை
அறந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி, அவருடைய தொகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வில்லை. அவர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு டிடிவி தினகரன் பக்கம் சென்று அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். குறிப்பாக அறந்தாங்கி நகராட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதே போல் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகம், அவருடைய தொகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. கீரனுார் பேரூராட்சியில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. குறிப்பாக பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை.

பேருந்து நிலையும் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. கந்தர்வகோட்டை பேருந்துநிலைய விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்வதில்லை. கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள குன்னாண்டார்கோவில் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்து தரவில்லை. சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஏரி, குளங்களில் உள்ள வாரத்து வாரிகளையும், துாரவாரக்கூட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை என தொகுதி மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவுகிறது.

Tags : AIADMK ,clashes ,Pudukkottai district , Pudukkottai, election ticket, AIADMK, Kudumipidi
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...