×

குரு - சிஷ்யன் ஈகோ மோதல் பூட்டு தொகுதியில் அதிமுகவுக்கு ‘வேட்டு?’

*  உட்கட்சி பூசலால் திணறுது திண்டுக்கல்
* மாஜி மேயரும் களமிறங்குவதால் விறுவிறு

பழநி: முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் தொடர் ஈகோ மோதலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தமுறை வென்ற 3 தொகுதிகளையும் இம்முறை இழக்கும் நிலையில் அதிமுக உள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக மாஜி மேயர் உட்பட பலர் இம்முறை களமிறங்க காத்திருப்பதால், உட்கட்சி பூசலில் திக்கி திணறுகிறது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை  ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் இம்மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம் ஆகிய 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. இம்மாவட்டத்தில் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் ஆகிய மூன்று முக்கிய திமுக ஆளுமைகள் உள்ளன.

குருவை மிஞ்சிய சிஷ்யன்
அதிமுகவில் தற்போதைய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகிய ஆளுமைகள் உள்ளன.  இவர்கள் இருவருக்குள்ளான மோதல் தொண்டர்களிடையே ஏகப்பிரசித்தம். நத்தம் விஸ்வநாதனை தீவிர அரசியலுக்கு கொண்டு வந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். இருவருக்கும் குரு - சிஷ்யன் உறவு உண்டு. ஆனால், குருவையே மிஞ்சி தலைமையிடம் நெருக்கம் காட்டி தன்னை வளர்த்துக் கொண்டார் நத்தம் விஸ்வநாதன்.

‘நம்பர் 2’ நத்தம்...
ஜெயலலிதா அமைச்சரவையில் ‘நம்பர் 2’ என்ற நிலை வரை முன்னேறினார் நத்தம் விஸ்வநாதன். இதனால் திண்டுக்கல் சீனிவாசன் ஒதுங்கியே இருந்தார். கடந்த தேர்தலுக்கு முன் ஜெயலலிதா, திடீரென இவர் மீது அதிருப்தி அடைந்தார். இதனால் சீட் கிடைக்குமா என்ற நிலை நிலவியது. கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பில்லாத ஆத்தூர் தொகுதியை நத்தம் விஸ்வநாதனுக்கு கொடுத்தார் ஜெயலலிதா. அங்கு அவர் பரிதாபமாக தோற்றுப்போனார். அதே நேரம் ஜெயலலிதாவின் கருணைப்பார்வை கிடைத்ததால், திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் பழைய ‘பார்முக்கு’ வந்தார். திண்டுக்கல் ெதாகுதியிலும் வெற்றி பெற்றார்.

உள்ளடி வேலைக்கு ரெடி...
ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நத்தம் விஸ்வநாதன், கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதா மரணமடைந்ததும் ஓபிஎஸ் அணியில் முதல் ஆளாக இணைந்தார். அதன் பின் எடப்பாடி ஆட்சியில் அமர்ந்ததும், மீண்டும் கவனிப்பாரற்ற நிலையில் தவித்து வந்தார். பின்னர் எடப்பாடி ஆதரவு நிலையை கையில் எடுத்த இவருக்கு அடித்தது ஜாக்பாட். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் சீனிவாசன் மேற்கு மாவட்ட செயலாளர் ஆனார். ஆனாலும், முன்பை விட இருதரப்பிலும் வாக்குவாத மோதல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் இவர்களில் எவரின் ஆதரவாளருக்கு சீட் கொடுத்தாலும், உள்ளடி வேலையை பார்க்க உட்கட்சியினரே வரிந்து கட்டி நிற்கின்றனர். மேலும், தொகுதி மக்களும் திண்டுக்கல் சீனிவாசன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வாரிசுகளுக்காக போர்...
நத்தம் விஸ்வநாதன் மீண்டும் போட்டியாக வந்து விட்டதால், இம்முறை தனக்கு மீண்டும் சீட் கேட்டு திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிடம் மன்றாடி வருகிறார்.  ஒருவேளை தலைமை மறுத்தால், தனது மகன்  ராஜ்மோகனுக்கு சீட் கேட்க திட்டமிட்டிருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ் தனக்கு சீட் கேட்டு தலைமையிடம் போராடி வருகிறாராம். உள்ளூர் கட்சியினரிடம் நல்ல செல்வாக்கு வளர்த்துள்ள மருதராஜ் தனக்கு இம்முறை சீட் கேட்பதால், அதிமுக தலைமை குழப்பத்தில் உள்ளதாம்.

வேற யாராவது...
கட்சியில் 2 முக்கிய சீனியர்களின் மோதல் போக்கு, மாஜிக்கள் போட்டியிட விருப்பம் காட்டுவதால், பொதுவான ஒருவருக்கு கொடுத்து விடலாமா அல்லது கூட்டணிக்கு இத்தொகுதியை கைமாற்றி விடலாமா என அதிமுக தலைமை யோசித்து வருகிறதாம். குரு - சிஷ்யன் மோதல், தேர்வான எம்எல்ஏக்கள் மீதான அதிருப்தி, உட்கட்சிப்பூசல் போன்ற காரணங்களால், இம்முறை கூடுதல் பின்னடைவை பூட்டுக்கு புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவுக்கு தர உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.சர்ச்சை பேச்சுகளால் சங்கடத்தில் அமைச்சர்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் தொடர் சர்ச்சை பேச்சுகளும் மாவட்டத்தில் அதிமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்பது பொய்’, ‘ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை’, பாரத பிரதமர் நரசிம்மராவ், மன்மோகன் சிங், எம்ஜிஆர்’ எனக்கூறியது, ‘இயேசுநாதரை கொன்ற கோட்சே, பொங்கல் பணம் டாஸ்மாக்கிற்கு வந்து சேரும்’ என தொடர்ந்து மேடைகளில் இவர் பேசிய உளறல் பேச்சுகள், ஆதிவாசி சிறுவனை செருப்பு மாட்ட வைத்த சம்பவம் மக்களிடையே அதிமுக அரசுக்கு பெரும் கெட்டப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்திற்கு என வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றாததாலும், இவர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அவருக்கா? இவருக்கா?
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும், நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல்  சீனிவாசனின் ஆதரவாளர்கள் சம அளவில் உள்ளனர். இவர்களுக்குள் இன்றளவும்  ஒட்டுதல் ஏற்படவில்லை. மேலும், கடந்த முறை நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருந்தபோது, அவரது மைத்துனர் கண்ணன் நிழல் அமைச்சர் போல செயல்பட்டு அதிகாரம் காட்டியதும் அதிமுக தொண்டர்கள், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம் ஆகிய 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.

Tags : Guru - Disciple Ego Conflict ,Hunt , Guru - Disciple, Ego Conflict, Lock Volume, Overlord, Hunt
× RELATED கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு...