×

அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரசிகர்களை பதம் பார்க்கும் இருக்கைகள் : சரிசெய்ய கோரிக்ைக

நாகர்கோவில்:  நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடைந்த இருக்கைகளை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் பலர் உள்ளனர். அவர்கள் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு போதுமான விளையாட்டு மைதானம் என்பது குமரி மாவட்டத்தில் இல்லை. அனைத்து விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

 குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து, தடகளம், மற்றும் கூடைபந்து, கைப்பந்து போட்டிகள் நடத்தவும், பயிற்சிகள் பெறவும் முடியும். மேலும் ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும்போது அண்ணா விளையாட்டு மைதானத்தில் சில மாற்றங்கள் செய்து விளையாட வேண்டிய நிலை இருந்து வருகிறது.   இதனால் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவது பெரும் சவாலாக உள்ளது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை, மாலை வேளையில் தடகள பயிற்சி பெறுவதற்கு என பல வீரர், வீராங்கனைகள் வருகின்றனர். இதுபோல் கைப்பந்து, கூடைப்பந்து பயிற்சியும் பெற்று வருகின்றனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாணவிகள் விடுதியும் அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் கைப்பந்து, தடகள பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 கடந்த காலங்களில் இங்கு விளையாட்டு போட்டிகள் நடக்கும்போது பார்வையாளர்கள் இருக்கையில் அதிகஅளவு மக்கள் இருந்து விளையாட்டுகளை பார்த்து மகிழ்வார்கள். கடந்த சில வருடத்திற்கு முன்பு விளையாட்டு மைதானத்தில் உள்ள ஓடுதளம் தாழ்வாக உள்ளது என மண் போட்டு உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த ஓடுதளத்தின் தன்மை தற்போது மாறியுள்ளது. சரியாக மண்போட்டு ஓடுதளம் அமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ஓடும் வீரர், வீராங்கனைகள் காயம் அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு மைதானத்தில் உள்ள கட்டிடங்களில் சேதமான பகுதிகளில் மராமத்து வேலைகள் நடந்தது. இந்நிலையில் ஒரு சில விளையாட்டுகள் இந்த மைதானத்தில் நடப்பதால், பார்வையாளர்களின் வரத்தும் குறைந்துள்ளது.  இதனால் பார்வையாளர்கள் இருந்து பார்க்கும் இருக்கைகள்(கேலரிகள்) போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதியில் உள்ள இருக்கைகளில் யாரும் சென்று அமராத காரணத்தால் பல இருக்கைக்கு போடப்பட்டுள்ள காங்கிரீட் தளங்கள் பெயர்ந்து உள்ளது. இதனால் கேலரியில் செல்லும் வீரர், வீராங்கனைகள் கீழே விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  குமரி மாவட்டத்தில் அதிக விளையாட்டு வீரர்கள் உருவாகி வரும் நிலையில் விளையாட்டு வீரர்களை கவரும் வகையில் பல வசதிகளுடன் விளையாட்டு மைதானத்தை மாவட்ட நிர்வாகம் அமைத்து கொடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள், மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : fans ,playground ,Anna , Anna playground, fans, word watching, seats
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்