×

விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் திரண்ட சுற்றுலா பயணிகள்: பரிசலில் சென்று உற்சாகம்

பென்னாகரம்: விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் உற்சாகமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள்ளுர் பகுதியில் இருந்து விடுமுறை நாட்களில் திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதன்படி விடுமுறை தினமான நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் திரண்டனர். பஸ், கார் மற்றும் டூவீலர்களில் காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் மெயினருவியில் குளித்தும் தொங்குபாலம், முதலை பண்ணை, மீன் காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். இதை தொடர்ந்து ஆலம்பாடி பரிசல் துறையில் இருந்து பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டுகளித்தனர்.

கடந்த வாரம் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், நேற்று காலை முதலே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். சுற்றுலா பயணிகள் வரவால் காலை முதலே டிபன் கடைகள், சாலையோர கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகளில் வியாபாரம் அமோகமாக நடந்தது. அதே போல் மீன் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வரவால் மசாஜ் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதே சமையல் செய்பவர்களும் உற்சாகமடைந்தனர். காலை முதலே அதிக பயணிகள் வந்திருந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். அதே போல் நீர்வரத்து 1500 கன அடியாக வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்றை விட இன்று அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Tags : holidays ,Okanagan , Tourists flock to Okanagan for the holidays: excited to go for a gift
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி