சட்டமன்ற தேர்தல் 2021 ரவுண்ட்அப்...! திருப்பூர் வடக்கு தொகுதி: டாலர் சிட்டியில் முட்டி மோதும் அதிமுக பிரபலங்கள்

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, கடந்த 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் வட்டம் சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், பட்டம்பாளையம், பெருமாநல்லூர், வள்ளிபுரம், ஈட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், மண்ணரை ஆகிய கிராமப்பகுதிகளும் செட்டிபாளையம், நெரிப்பெரிச்சல், தொட்டிபாளையம், 15 வேலம்பாளையம் என நகர்ப்புற பகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றன. இதுமட்டுமின்றி, திருப்பூர் தாலுகா (பகுதி)  பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், வள்ளிபுரம்,  பெருமாநல்லூர், எட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம்,  காளிபாளையம், மற்றும் மண்ணரை கிராமங்கள், செட்டிபாளையம் (சென்சஸ் டவுன்),  நெரிப்பெரிச்சல் (சென்சஸ் டவுன்), தொட்டிபாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும்  வேலம்பாளையம் (பேரூராட்சி), திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 1 முதல்  20 வரை உள்ள பகுதிகளும் இத்தொகுதியில் அடங்கும்.

இத்தொகுதியில், திருப்பூர் மாநகராட்சியின் 29 வார்டுகள் இடம்பெற்றுள்ளன. காந்திநகர், அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, குமார் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய, மாவட்டத்தின் பெரிய தொகுதியாக இது உள்ளது.

அதிகளவில் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இத்தொகுதியில், பிரதான தொழிலாக பின்னலாடை உற்பத்தி மற்றும் விவசாயம் உள்ளது. கொங்கு வேளாளர், முதலியார் மற்றும் சிறுபான்மையின மக்கள் இத்தொகுதியில் அதிகம் வசிக்கின்றனர். இத்தொகுதியில், தற்போதைய நிலவரப்படி, 3,76,133 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதிக்குள், நலத்திட்டங்கள் தாண்டிய வளர்ச்சிப்பணிகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று, கடந்த தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் வசிக்கும் இந்த தொகுதியில், 110 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 1,750 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. திருப்பூரில், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தொழிலாளர்களுக்கு புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆனால், தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாதாள சாக்கடை திட்டம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ஸ்மார்ட்சிட்டி பணிகள் தாமதமாகி வருகின்றன. மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த ஊராட்சி பகுதிகளில், துப்புரவு பணியாளர்கள் சரிவர நியமிக்கப்படவில்லை. இதனால், சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளில், மேட்டுப்பாளையம் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும்,  பின்னலாடை தொழில் துறையினர் சார்பில் வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள், மகளிர் தங்கும் விடுதிகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும், பாதாள சாக்கடை திட்டம், ஊத்துக்குளி சாலை, கொங்கு பிரதான சாலையில் போக்குவரத்து சீரமைப்பு, தேங்கிக்கிடக்கும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதெல்லாம் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளில் பெரும் பகுதி, திருப்பூர் தெற்கு தொகுதிக்குள் வருவதால், வடக்கு தொகுதியை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வீதிகளில் வாரக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் குப்பை, தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய் என மக்களின் அடிப்படை பிரச்னைகளை இத்தொகுதி எம்எல்ஏ கண்டுகொள்வதில்லை. இத்தொகுதியில் தற்போதைய அதிமுக எம்.எல்ஏ. விஜயகுமார், தொகுதிக்கு பெரிய அளவில் குறிப்பிடும்படியாக எதையும் செய்யவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் தார் ரோடு, சாக்கடை கால்வாய் என பல கோடி மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு, சில இடங்களில் பணிகள் அறைகுறையாகவும், சில இடங்களில் பணிகள் தொடங்காமலேயும் உள்ளது.

மேலும், இத்தொகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. ஆனாலும், மீண்டும் எனக்குத்தான் இத்தொகுதியில் ‘சீட்’ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜயகுமார் உள்ளார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆனந்தன், வனத்துறை அமைச்சராகவும், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்துசமய இறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. திருப்பூர் தாலுகாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்தது, கலெக்டர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவை எல்லாம், ஆனந்தனின் சாதனையாக கூறப்படுகிறது. இருந்தும் கட்சிக்குள் இவருக்கு பலத்த எதிர்ப்பும் இருக்கிறது. சிலர் உள்ளடி வேலை செய்து, இவரது மாநகர் மாவட்ட செயலாளர் பதவி பறித்துவிட்டனர்.

ஆனாலும், பொதுமக்களிடையே தனக்கு ஆதரவு அதிகம் இருப்பதால், எப்படியும் கட்சி தலைமை எனக்குத்தான் ‘சீட்’ ஒதுக்கும் என்கிறார் ஆனந்தன். இத்தொகுதிக்கு, முன்னாள் எம்எல்ஏ சிவசாமியும் குறி வைக்கிறார். இவர், எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அக்கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.ம.மு.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது திருப்பூர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமமுகவில் இருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு, இத்தொகுதியில் ஓரளவு செல்வாக்கு இருக்கும் நிலையில், மூத்த அமைச்சர்களின் ஆதரவோடு எப்படியும் ‘சீட்’ வாங்கிவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வலம் வருகிறார். இத்தொகுதியில், அதிமுகவினர் மத்தியில் தொடர் மல்லுக்கட்டு நடப்பதால், சீட் யாருக்கு? என்பது இழுபறியாகவே உள்ளது.

Related Stories:

>